'ஆர்ஆர்ஆர்' படப்பிடிப்பில் இணைந்த அஜய் தேவ்கன்

'ஆர்ஆர்ஆர்' படப்பிடிப்பில் இணைந்த அஜய் தேவ்கன்
Updated on
1 min read

'ஆர்ஆர்ஆர்' படத்தில் அஜய் தேவ்கன் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டார் ராஜமவுலி.

'பாகுபலி' படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'ஆர்ஆர்ஆர்'. ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் , அஜய் தேவ்கன், அலியா பட், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பிரம்மாண்டமான அரங்குகளிலும், வெளிநாட்டிலும் நடைபெற்றது.

இதுவரை நடந்த படப்பிடிப்பில் அஜய் தேவ்கன் காட்சிகளைப் படமாக்காமலேயே இருந்தார்கள். தற்போது நடைபெறும் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் அஜய் தேவ்கன் காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. என்ன கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கான் நடிக்கிறார் என்பதை மிகவும் ரகசியமாக வைத்துள்ளது படக்குழு.

நேற்று (ஜனவரி 21) முதல் 'ஆர்ஆர்ஆர்' படப்பிடிப்பில் கலந்து கொண்டது குறித்து அஜய் தேவ்கன் தனது ட்விட்டர் பதிவில் "கடந்த 2012ஆம் ஆண்டு முதல் ராஜமௌலி சாரை தெரியும். அப்போதிலிருந்து பல சுவாரஸ்ய வழிகளில் நாங்கள் இணைந்திருக்கிறோம். #RRR படத்தில் அவரோடு பணிபுரிவது மகிழ்ச்சியாகவும் கவுரவமாகவும் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

அவருக்குப் பதிலளிக்கும் விதமாக இயக்குநர் ராஜவுமலி "எனக்கும் அதே உணர்வு தான் சார். முதல் நாள் படப்பிடிப்பு அற்புதமாக இருந்தது" என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெறாத காரணத்தால் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. முதலில் ஜூலை 30-ம் தேதி வெளியீடாக இருந்த இந்தப் படம், தற்போது அக்டோபர் வெளியீட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது.

சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in