

'அசுரன்' தெலுங்கு ரீமேக்கான 'நாராப்பா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு, படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ், பசுபதி, கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அசுரன்'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இதன் ரீமேக் உரிமையைக் கைப்பற்றும் போட்டி நடந்தது.
இதன் தெலுங்கு ரீமேக்கை சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் தாணு இருவரும் இணைந்து தயாரிக்க, வெங்கடேஷ் நாயகனாக நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் ப்ரியாமணி, கென் கருணாஸ் கதாபாத்திரத்தில் அவரே நடிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தற்போது 'நாராப்பா' எனத் தலைப்பிடப்பட்டு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. ஸ்ரீகாந்த் அட்டாலா இயக்கவுள்ளார். 'அசுரன்' ஃபர்ஸ்ட் லுக் போலவே, தெலுங்கு ரீமேக்கின் ஃபர்ஸ்ட் லுக்கும் வடிவமைக்கப்பட்டுள்ளதால், பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.