தமிழிலும் வெளியாகும் '96' தெலுங்கு ரீமேக் பாடல்
'96' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'ஜானு' படத்தின் பாடல் தமிழிலும் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, தேவதர்ஷினி, கெளரி கிஷண் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் '96'. 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக் தற்போது வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.
சர்வானந்த், சமந்தா, கெளரி கிஷண் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தையும் பிரேம் குமாரே இயக்கியுள்ளார். 'ஜானு' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதனிடையே, இந்தப் படத்தின் முதல் பாடல் இன்று (ஜனவரி 21) இணையத்தில் வெளியிடப்படவுள்ளது. இது தமிழிலும் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தங்களது ட்விட்டர் பதிவில் "’ஜானு’ படத்துக்காகப் புதிதாகப் பாடல்களை உருவாக்கியுள்ளோம்.
ஆகையால், இதனைத் தமிழிலும் வெளியிட முடிவு செய்துள்ளோம். முதல் பாடல் 'பிராணம்' என்ற பெயரில் தெலுங்கிலும், 'தீரா' என்ற பெயரில் தமிழிலும் வெளியாகும்" என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு '96' படத்தின் ரசிகர்களை மிகவும் உற்சாகமாக்கியுள்ளது.
