

நடிகர் நிதினின் திருமண ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. பிரம்மாண்டமான முறையில் துபாயில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தெலுங்கு சினிமா உலகில் 'ஜெயம்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நிதின். இந்த 18 வருடங்களில் இவர் குறைவான படங்களே நடித்திருந்தாலும் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துள்ளார். ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். இவர், அமெரிக்காவில் எம்பிஏ படித்து முடித்த ஷாலினி என்பவரைத் திருமணம் செய்துகொள்ளப் போவதாகச் செய்திகள் உலவின.
தற்போது அந்தச் செய்திகளை உண்மையாக்கும் விதமாக, நிதினின் தந்தை சுதாகர் ரெட்டி, இந்தத் திருமணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார். கடந்த 4 வருடங்களாக நிதின் - ஷாலினி நட்பு தொடர்கிறது என்றும், இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட காதல் திருமணம் என்றும் கூறப்படுகிறது.
துபாயின் பிரபல ஹோட்டல் ஒன்றில் ஏப்ரல் மாதம் இந்தத் திருமணம் நடக்கவுள்ளது. குடும்பத்தினரும், திரையுலகைச் சேர்ந்த நட்சத்திரங்களும் சூழ இந்தத் திருமணம் பிரம்மாண்டமான முறையில் திட்டமிடப்பட்டுள்ளது என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.