

'சரிலேரு நீக்கெவரு' படத்தை ஒப்புக்கொண்டது ஏன் என்று மகேஷ் பாபு விளக்கமளித்துள்ளார்
அனில் ரவிபுடி இயக்கத்தில் மகேஷ் பாபு, விஜயசாந்தி, ராஷ்மிகா, பிரகாஷ் ராஜ், சங்கீதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'சரிலேரு நீக்கெவரு'. இன்று (ஜனவரி 11) வெளியாகியுள்ள இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக வரவேற்பு இருந்தாலும், வசூல் ரீதியாக எப்படி என்று நாளை தெரியவரும்.
இந்தப் படம் ஜூலையில் அறிவிக்கப்பட்டு, டிசம்பரில் முழுமையாக முடிக்கப்பட்டு ஜனவரியில் வெளியாகியுள்ளது. சமீபத்திய மகேஷ் பாபு படங்களில் குறைந்த நாட்களில் எடுக்கப்பட்ட படம் இதுதான்.
இந்தப் படத்தை ஒப்புக் கொண்டது குறித்து மகேஷ் பாபு கூறியதாவது:
"தீவிரமான, கருத்து ரீதியான படங்களைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன். அந்தப் படங்கள் நன்றாக ஓடியதும் மகிழ்ச்சி. முக்கியமாக, ’மஹரிஷி’ பார்த்த பிறகு பள்ளி மாணவர்கள் வார இறுதியில் விவசாயத்தில் ஈடுபட்டார்கள். ஆனால், மனதின் ஓரத்தில் என் ரசிகர்களுக்கு நான் அதிகமாக கருத்து சொல்வதாக, அவர்களுக்கு முழு நீளப் பொழுதுபோக்கு படத்தைத் தருவதற்கான நேரம் இது என்று நினைத்தேன்.
'சரிலேரு நீக்கெவரு' படத்தில் ஒரு முக்கியமான கருத்து சொல்லப்பட்டிருந்தாலும் அப்படியான கருத்தைச் சொல்லும் படத்தில் தான் நடிக்க வேண்டும் என்று பார்த்து முடிவெடுக்க முடியாது. இன்றைய தலைமுறைக்குத் தேவையான, தொடர்புடைய கதைகள் எனக்கு வந்தது என் அதிர்ஷ்டமே.
'சரிலேரு நீக்கெவரு' அடுத்த வருடம் எடுக்கப்பட்டிருக்க வேண்டிய படம். ஆனால் திடீரென முடிவெடுத்தேன். இயக்குநர் அனில் ரவிபுடி நான்கு மாதங்களில் திரைக்கதை எழுதி முடித்தார். ஜூலையில் ஆரம்பித்து டிசம்பரில் படத்தை முடித்துவிட்டோம். இப்போது படத்தைப் பார்த்த பிறகு ஆர்வத்துடன் இருக்கிறேன். அடுத்த வருடம் தள்ளிப்போடாமல் உடனடியாக இந்தப் படத்தில் நடிக்க முடிவெடுத்தது குறித்து சந்தோஷப்பட்டேன்.
'சரிலேரு நீக்கெவரு' படத்தில் பரிசோதிக்க நிறைய தேர்வுகள், வாய்ப்புகள் எனக்கு இருந்தன. படத்தில் நிறைய நகைச்சுவைக் காட்சிகள் இருந்தாலும் நான் 2011-ல் 'தூகுடு' படத்தில் செய்ததை மீண்டும் செய்ய முடியாது. 'தூகுடு' படத்தின் அம்சங்களை மட்டும் வைத்து, அதில் புதிதாக ஒரு நகைச்சுவை தன்மையைக் கொண்டு வருவது எனக்குச் சவாலாக இருந்தது.
முதல் சில நாட்கள், என் நடிப்பில் சில விஷயங்களைத் தவிர்க்க வேண்டியிருந்ததால் கடினமாக இருந்தது. ஆனால் மூன்று நாட்களுக்குப் பிறகு அனில் ரவிபுடியின் உலகத்துக்குச் சென்றுவிட்டேன். ஒரு நட்சத்திரத்தின் படத்துக்குத் தேவையான எல்லா விஷயங்களையும் கொண்டு வந்து அற்புதமான படத்தைத் தந்திருக்கிறார்”.
இவ்வாறு மகேஷ் பாபு தெரிவித்தார்.