

'96' தெலுங்கு ரீமேக்கான 'ஜானு' தொடர்பான ரசிகரின் கேள்விக்கு சமந்தா பதிலளித்துள்ளார்.
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா, தேவதர்ஷினி, கெளரி கிஷண் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் '96'. 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக் தற்போது வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.
சர்வானந்த், சமந்தா, கெளரி கிஷண் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தையும் பிரேம் குமாரே இயக்கியுள்ளார். 'ஜானு' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
'ஜானு' டீஸர் தொடர்பாக சமந்தாவைக் குறிப்பிட்டு ரசிகர் ஒருவர், " 'ஜானு' டீஸரின் சிறப்பம்சம் என்னவென்றால் ஒரிஜினல் போல் இல்லாமல், சமந்தா அவரது பாணியில் நடித்துள்ளார். அவர் ஒரு சிறப்பான நடிகை" என்று தெரிவித்தார்.
ரசிகருக்குப் பதிலளிக்கும் விதமாக சமந்தா, "மிக்க நன்றி. த்ரிஷாவின் கச்சிதமான நடிப்பை அப்படியே பிரதி எடுக்காமல் இருப்பது முக்கியம் என்று நான் நினைத்தேன். அது திரையில் ஒழுங்காக இருக்காது. ஒப்பிடுவதற்காக ஜானு எடுக்கப்படவில்லை. இன்னும் நிறைய மக்கள் அந்த அனுபவத்தை உணரவே எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார் சமந்தா.