

இந்திய சாதனைப் புத்தகத்தில் 'கே.ஜி.எஃப்' நாயகன் யாஷ் பிறந்த நாளுக்கு வெட்டப்பட்ட கேக் இடம் பெற்றுள்ளது.
’கேஜிஎஃப்’ படத்தின் நாயகன் நடிகர் யாஷ் தனது 34-வது பிறந்த நாளை ஜனவரி 8-ம் தேதி கொண்டாடினார். இதற்காக யாஷின் ரசிகர் ஒருவர் 5,000 கிலோ கேக் ஒன்றைத் தயாரித்து வெட்டியுள்ளார். இன்னொரு ரசிகர் 216 அடி கட் அவுட் வைத்துள்ளார்.
பெங்களூருவில் தயாரிக்கப்பட்ட 5,000 கிலோ கேக், வேணு கௌடா என்பவரின் முயற்சியால் உருவாகியிருக்கிறது. இதற்காக 1,800 கிலோ மாவு, 1,150 கிலோ சர்க்கரை, 1,750 கிலோ க்ரீம், 22,500 முட்டைகள், 50 கிலோ உலர் பழங்கள், 50 கிலோ நெய் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன.
40 அடிக்கு 70 அடி என்ற அளவிலிருந்த இந்த கேக், பெங்களூருவில் இருக்கும் நந்தி லிங்க் மைதானத்தில் வைக்கப்பட்டது. 20 பேர் கொண்ட குழு 96 மணிநேரம் உழைத்து இந்த கேக்கை உருவாக்கியுள்ளனர்.
இந்த கேக்கை தயாரித்த வீடியோ யாஷின் ரசிகர் பக்கம் ஒன்றில் வெளியாகியுள்ளது. தனது மனைவி ராதிகா பண்டிட்டுடன் யாஷ் இந்த கேக்கை வெட்டி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார்.
இந்த கேக், ஒரு நட்சத்திரத்துக்காக வெட்டப்பட்ட மிகப்பெரிய பிறந்த நாள் கேக் என்ற பெயரைப் பெற்று இந்திய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இன்னொரு ரசிகர் வைத்த 216 அடி கட் அவுட்டும் உலகிலேயே பெரிய கட் அவுட்டாக கருதப்படுகிறது.