

நடிகர் மகேஷ் பாபுவைச் சந்திக்க எண்ணற்ற ரசிகர்கள் கூடியதால் ஏற்பட்ட நெரிசலில் சிலர் காயம் அடைந்தனர்.
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு தனது ஒவ்வொரு படத்தின் வெளியீட்டுக்கு முன்பும் ரசிகர்களைச் சந்திப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அவர் நடிப்பில் தற்போது 'சரிலேரு நீக்கெவரு' என்ற திரைப்படம் வெளியாகவுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பின் இந்தப் படத்தில் விஜயசாந்தி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
பொங்கலை முன்னிட்டு அடுத்த மாதம் வெளியாகவுள்ள இந்தத் திரைப்படத்தைப் பிரபலப்படுத்த மகேஷ் பாபு ரசிகர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சியை தயாரிப்பு நிறுவனம் ஏற்பாடு செய்தது. ஹைதராபாத்தின் சந்தன் நகரில் இருக்கும் அலுமினியம் தொழிற்சாலையில் இந்தச் சந்திப்பு நடந்தது. மகேஷ் பாபுவுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆனால், எதிர்பார்த்ததை விட அதிக ரசிகர்கள் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னரே கூடிவிட்டனர். ஏற்பாட்டாளர்கள் 1000 பேருக்கான நுழைவுக்கு மட்டுமே பாஸ் அளித்துள்ளனர். ஆனால், கிட்டதட்ட 2000 ரசிகர்கள் கூடிவிட்டனர். அதுவும் மகேஷ் பாபு அந்த இடத்துக்கு வந்திறங்கியவுடன் ரசிகர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் சிலருக்கு சின்ன காயங்களும், இரண்டு ரசிகர்களுக்கு எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது.
அடிபட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். வேறெந்த அசம்பாவிதமும் நடக்காமல் தவிர்க்கப்பட்டது. இந்தச் சம்பவத்துக்குப் பின்னர், இந்நிகழ்ச்சியை நடத்துவதற்கான போதிய அனுமதியைக் காவல் துறையிடமிருந்து தயாரிப்புத் தரப்பு பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான ஏகே என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனத்தின் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.