

'கபீர் சிங்' படத்தைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கவுள்ள புதிய படத்தை சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடித்து கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான படம் ‘அர்ஜுன் ரெட்டி’. சந்தீப் வாங்கா ரெட்டி இயக்கிய இந்தப் படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியால் தமிழ் மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தி ரீமேக்கை சந்தீப் ரெட்டி வாங்காவே இயக்கினார். ஷாகித் கபூர் நாயகனாக நடித்த இந்தப் படம் மாபெரும் வசூல் சாதனை புரிந்தது. இதனால், இந்தி திரையுலகில் சந்தீப் ரெட்டி வாங்காவின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இதனிடையே, 'கபீர் சிங்' படத்தைத் தொடர்ந்து மகேஷ் பாபு படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது 'டெவில்' என்ற கதையைக் கூறினார் சந்தீப். ரொம்பவே வில்லத்தனம் கலந்த வித்தியாசமான கதாபாத்திரம் தனக்குச் சரியாகப் பொருந்தாது என மகேஷ் பாபு நிராகரித்துவிட்டார்.
அதே கதையில் இந்தியில் ரன்பீர் கபூர் நடிக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. முதலில் ஆர்வம் காட்டியவர் தற்போது இந்தக் கதை தனக்குச் சரியாக இருக்காது என விலகிவிட்டதாகத் தெரிகிறது. இதனால், பிரபாஸிடம் இதே கதையைக் கூறியுள்ளார் சந்தீப் ரெட்டி வாங்கா. அவர் இதில் நடிக்க ஆர்வம் காட்டியுள்ளார்.
வெளிநாட்டிலிருந்து பிரபாஸ் திரும்பியவுடன், இந்தக் கூட்டணி தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகி அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.