

கதை நன்றாக இருந்தால் உரிய ரசிகர்களைப் போய்ச் சேரும் என்று நடிகர் ரக்ஷித் ஷெட்டி நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
சச்சின் ரவி இயக்கத்தில் ரக்ஷித் ஷெட்டி, சந்திரஜித் பெல்லிப்பா, அபிஜித் மகேஷ், நாகார்ஜுன் ஷர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அவனே ஸ்ரீமன் நாராயணா'. கன்னடத்தில் இந்தப் படம் தயாரானாலும் தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகவுள்ளது.
தமிழில் இந்தப் படத்தை விளம்பரப்படுத்த படக்குழுவினர் சென்னை வந்திருந்தனர். அப்போது பத்திரிகையாளர்கள் மத்தியில் ரக்ஷித் ஷெட்டி பேசிய போது, "'அவனே ஸ்ரீமன் நாராயணா' படத்தை ஏன் தமிழில் வெளியிடுகிறீர்கள் என நன் நண்பர்கள் கேட்டார்கள். சிறுவயதில், என் அம்மா கே.பாலசந்தர் மற்றும் கமல்ஹாசனின் பெரிய ரசிகை.
நான் உடுப்பியில் தமிழ்ப் படங்கள் பார்த்து வளர்ந்தேன். எப்படி நாங்கள் மற்ற மொழிப்படங்களைப் பார்க்கிறோம் என்று நான் ஆச்சரியப்படுவேன். ஆனால் கதை நன்றாக இருந்தால் அது உரிய ரசிகர்களைப் போய்ச் சேரும் என்பது இன்று புரிகிறது.
நான் நடிகனாக முயன்றபோது 'அவனே ஸ்ரீமன் நாராயணா' கதையை எழுதினேன். இப்போது கதை நிறைய மாறியிருக்கிறது. தமிழ் டப்பிங்குக்கு நாங்கள் அதிக அக்கறை எடுத்துக்கொண்டோம். எங்கள் அணி இரண்டு மாதங்கள் தமிழுக்காக மட்டும் எடுத்துக்கொண்டது" என்று தெரிவித்தார் ரக்ஷித் ஷெட்டி.