

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் - த்ரிஷா இணைந்து நடிக்கும் படத்துக்கு 'ராம்' எனத் தலைப்பிட்டுள்ளனர்.
மலையாளத்தில் மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணி இணைந்து 'த்ரிஷ்யம்' என்ற மிகப்பெரிய வெற்றிப் படத்தைக் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி மீண்டும் இணையப் பேச்சுவார்த்தை நடத்தியது. இறுதியில் இந்தக் கூட்டணி இணையும் படத்தின் பூஜை கேரளாவில் நேற்று (டிசம்பர் 16) நடைபெற்றது.
இந்தப் படத்தில் மோகன்லாலுடன் த்ரிஷா நடிக்கவுள்ளார். பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தை அபிஷேக் பிலிம்ஸ் மற்றும் ஃபேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது. பல்வேறு வெளிநாடுகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
ஜனவரி 5-ம் தேதி தொடங்கும் இந்தப் படத்துக்கு 'ராம்' எனத் தலைப்பிட்டுள்ளனர். ஓணம் பண்டிகை வெளியீடாகத் திரைக்கு வரும் என்றும் அறிவித்துள்ளார்கள்.
இந்த விழாவில் மோகன்லால் பேசும்போது, "'லூசிஃபர்' படத்துக்குப் பிறகு பெரிய பொருட்செலவில் உருவாகும் படங்களில்தான் நடித்து வருகிறேன். ஒரு கட்டத்துக்குப் பிறகு, பெரிய பொருட்செலவில் உருவாகும் படங்களில் நடித்தால் மட்டுமே இந்திய மற்றும் உலக அளவில் உள்ள ரசிகர்களைக் கவர முடியும்" என்று தெரிவித்தார்.