

ஜூனியர் என்.டி.ஆர் லுக் இணையத்தில் வீடியோ வடிவில் லீக்கானதால், 'ஆர்.ஆர்.ஆர்.' படக்குழு பெரும் அதிர்ச்சியடைந்துள்ளது.
சமீபமாக ஒரு படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியாவது வழக்கமாகி வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் லீக்கானது குறிப்பிடத்தக்கது. ஆனால், ராஜமவுலி படத்தின் படப்பிடிப்பு எப்போதுமே கடுமையான விதிகளுடன் தான் நடக்கும்.
தற்போது அவர் இயக்கி வரும் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் படப்பிடிப்பு தளத்தை வீடியோவாக படமாக்கப்பட்டு இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இதில் ஜுனியர் என்.டி.ஆர் லுக் என்ன என்பது தெளிவாகியுள்ளது. இந்த வீடியோ வெளியீட்டால் படக்குழு பெரும் அதிர்ச்சியடைந்துள்ளது.
மேலும், இந்த வீடியோவை வைத்து வீடியோ செய்திகள் வெளியிட்டு வந்த அனைத்து வீடியோ பதிவுகளையும் நீக்கத் தொடங்கியுள்ளது தயாரிப்பு நிறுவனம். இதனை ஒட்டுமொத்தமாக இணையத்திலிருந்து நீக்குவதற்கான முன்முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
இந்தப் படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், அலியா பட், சமுத்திரக்கனி, ஓலிவா மோரீஸ், ரே ஸ்டீவன்சன், அலிசன் டூடி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். பெரும் பொருட்செலவில் டிவிவி நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தியாவில் ஹைதராபாத், புனே உள்ளிட்ட இடங்களிலும் மற்றும் வெளிநாடுகளில் சில காட்சிகளையும் படமாக்கியுள்ளது படக்குழு.
கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய் முதல் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாக்கப்படும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து முக்கிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது. 2020-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி படம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.