மூத்த தெலுங்கு நடிகர் கொல்லப்புடி மாருதி ராவ் காலமானார்

மூத்த தெலுங்கு நடிகர் கொல்லப்புடி மாருதி ராவ் காலமானார்
Updated on
1 min read

மூத்த தெலுங்கு நடிகர் கொல்லப்புடி மாருதி ராவ் சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 80.

1982-ம் ஆண்டு நடிகராக அறிமுகமாகி, நகைச்சுவை, குணச்சித்திரம், எதிர்மறை என பல்வேறு கதாபாத்திரங்களில் கிட்டத்தட்ட 300 படங்களில் நடித்தவர் கொல்லபுடி மாருதி ராவ். 1939-ம் ஆண்டு பிறந்த மாருதி ராவ் விசாகப்பட்டினத்தில் வளர்ந்தார். கல்லூரிப் படிப்பு முடிந்து ஒரு தினசரியில் பணிபுரிந்தார். பின்பு கிட்டத்தட்ட 19 வருடங்கள் அகில இந்திய வானொலி நிலையத்தில் பணிபுரிந்தார்.

அங்கு பணிபுரிந்த அதே நேரத்தில் நாடகங்கள், நாவல்கள், புத்தகங்கள் எழுதி வந்தார். பின்பு திரைப்படங்களில் திரைக்கதை ஆசிரியராக, வசனகர்த்தாவாகப் பணியாற்றியுள்ளார். இவரது தெலுங்கு நாடகங்களும், எழுத்துகளும் இவருக்குப் புகழைத் தேடித்தந்தன. இதற்காகப் பல விருதுகளையும் பெற்றுள்ளார். நடிகராக 6 முறை ஆந்திர மாநில விருதான நந்தி விருதினைப் பெற்றுள்ளார்.

தமிழில் 'சிப்பிக்குள் முத்து', 'இந்திரன் சந்திரன்', 'ஹே ராம்', 'தோனி', 'இஞ்சி இடுப்பழகி' உள்ளிட்ட எண்ணற்ற படங்களில் மாருதி ராவ் நடித்துள்ளார். முக்கியமாக 1993-ம் ஆண்டு அஜித் குமார் தெலுங்கில் அறிமுகமான ’பிரேம புஸ்தகம்’ படத்தின் இயக்குநர் இவரது மகன் கொல்லப்புடி ஸ்ரீனிவாஸ். படப்பிடிப்பு முடியும் முன்பே ஸ்ரீனிவாஸ் ஒரு விபத்தில் காலமானதால், கொல்லப்புடி மாருதி ராவ் மீதிப் படத்தை இயக்கி முடித்தார். தனது மகனின் பெயரில் மாருதி ராவ் வருடாவருடம் விருது வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உடல்நலக் குறைவால் கொல்லப்புடி மாருதி ராவ் இன்று சென்னையில் காலமானார். அவரின் மறைவுக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உட்பட பல்வேறு தலைவர்களும், பிரபலங்களும், நட்சத்திரங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in