

என்கவுன்ட்டர் கொலைகளைக் கொண்டாடுவது சரியல்ல என்று ஹைதராபாத் என்கவுன்ட்டர் தொடர்பாக சமந்தா தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கால்நடை பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து முகமது பாஷா, சிவா, நவீன் மற்றும் சென்ன கேசவலு ஆகியோரைக் கைது செய்தது காவல்துறை.
டிசம்பர் 6-ம் தேதி அதிகாலை குற்றவாளிகள் நால்வரும் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். அதுவும், பெண் மருத்துவர் இறந்த அதே இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த என்கவுன்ட்டருக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும், ஹைதராபாத் காவல் துறையினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தார்கள்.
இந்த என்கவுன்ட்டர் தொடர்பாக சமந்தா, "நான் தெலங்கானாவை நேசிக்கிறேன். பயம் ஒரு மிகப்பெரிய தீர்வு சில நேரங்களில் அது மட்டுமே தீர்வு" என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பெண் மருத்துவருக்கு ஏன் இரங்கல் தெரிவிக்கவில்லை என்பதற்கான விளக்கத்தையும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மும்பையில் ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் சமந்தா. அப்போது பத்திரிகையாளர்கள் மத்தியில் சமந்தா பேசும்போது, அவரிடம் ஹைதராபாத் என்கவுன்ட்டர் தொடர்பாகக் கேள்விகள் எழுப்பினர்.
அதற்கு சமந்தா, "என்கவுன்ட்டர் கொலைகளைக் கொண்டாடுவது சரியல்ல. அதே நேரத்தில் பயம் தான் இதற்கு ஒரே தீர்வாக இருக்க முடியும். நமது நீதிமன்றங்களில் 3 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. நீதிக்கான நேரம் எப்போதும் வரும்? அதற்கு நீண்ட காலம் பிடிக்கும். நமது நீதித்துறையைச் சரி செய்வதற்கான மணி இது.
பாதிக்கப்பட்டவர்களும், அவர்களது குடும்பமும் நீண்ட காலம் காத்திருக்கக்கூடாது. அது மிகவும் தவறு என நான் நினைக்கிறேன். ஆனால் நான் இங்கு நின்று என்கவுன்ட்டர்களை கொண்டாடிக் கொண்டிருக்க மாட்டேன். ஆம் ஒரு என்கவுன்ட்டர் நடந்தது, நீதி வழங்கப்பட்டு விட்டது. ஆனால் அது சந்தோஷமான விஷயம் என்று சொல்ல மாட்டேன்" என்று தெரிவித்துள்ளார் சமந்தா.