

மனித குலத்தையே உலுக்கும் மோசமான ஒரு சம்பவம் இது என்று பிரியங்கா ரெட்டி மரணம் தொடர்பாக அனுஷ்கா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர் பிரியங்கா ரெட்டி பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் இந்தியா முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து முகமது பாஷா, சிவா, நவீன் மற்றும் சென்ன கேசவுலு ஆகியோரைக் கைது செய்துள்ளது காவல்துறை.
பிரியங்கா ரெட்டி மரணம் தொடர்பாக பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் தங்களுடைய கடும் கண்டனத்தைப் பதிவு செய்து வருகிறார்கள். இது தொடர்பாகத் தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான அனுஷ்கா தனது ஃபேஸ்புக் பதிவில், “அப்பாவி பிரியங்கா ரெட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். மனித குலத்தையே உலுக்கும் மோசமான ஒரு சம்பவம் இது.
இந்தக் குற்றவாளிகளைக் காட்டு மிருகங்களோடு ஒப்பிட்டால் அவையே அவமானகரமாக உணரும். நம் சமூகத்தில் ஒரு பெண்ணாக இருப்பதே குற்றமா? பிரியங்காவின் மரணத்துக்குக் காரணமான குற்றவாளிகளுக்கு உடனடி தண்டனை கிடைக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். பிரியங்காவின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என்று தெரிவித்துள்ளார் அனுஷ்கா.