

நடிகர் ஷான் நிகம், படப்பிடிப்பு தளத்தில் போதை மருந்து உட்கொண்டு பிரச்சினை செய்ததால் அவரை இனி எந்த திரைப்படங்களிலும் ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. இந்த குற்றச்சாட்டு துறையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஷான் நிகத்தை மலையாள சினிமாவில் தடை செய்வதாகவும் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. தற்போது தனது தலை முடியை மழித்து மொட்டை அடித்து, தாடியையும் எடுத்துள்ளார் ஷான் நிகம். இதனால் தயாரிப்பில் இருக்கும் வெயில் மற்றும் குர்பானி என இரண்டு படங்கள் இவரால் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஷான் நிகம் 7 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் நிர்பந்தித்துள்ளது.
இந்த விவரங்கள் மலையாளா திரைப்பட நடிகர் சங்கமான அம்மாவுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷான் நிகத்துக்கும் தயாரிப்பாளருக்கும் சமரசம் செய்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த எடவேலா பாபு என்பவரும் இந்த விஷயத்தில் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாது என விட்டுவிட்டதாகத் தெரிகிறது.
மேலும் சங்கத்தின் தலைவர் ரெஜபுத்ரா ரஞ்சித், நடிகர்கல் கேரவன்களில் அதிக நேரம் செலவிட்டால், அதை காவல்துறை பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் பேசியுள்ளார். இது எல்லா நடிகர்களை நோக்கிய குற்றச்சாட்டு இல்லை என்றும், ஒரு சில புதிய தலைமுறை நடிகர்களுக்கே இது பொருந்தும் என்றும் தயாரிப்பாளர் சங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. எல் எஸ் டி போன்ற புதிய போதை மருந்துகளையும் இந்த நடிகர்கள் பயன்படுத்துவதாக, தயாரிப்பாளர் சியத் கோகர் கூறியுள்ளார். இது தெரிந்த சில ஊடகங்களும் அமைதி காப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஷான் நிகத்துக்கான இந்த தடை, மற்ற மாநில மொழிகளிலும் நீட்டிக்க வாய்ப்புகள் உண்டு என்று திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- எம்.பி.பிரவீன் (தி இந்து ஆங்கிலம்)