Published : 27 Nov 2019 01:46 PM
Last Updated : 27 Nov 2019 01:46 PM

'அர்ஜுன் ரெட்டி' சர்ச்சை: பார்வதியை மறைமுகமாகச் சாடிய விஜய் தேவரகொண்டாவின் தம்பி

'அர்ஜுன் ரெட்டி' படம் தொடர்பாக பார்வதி தெரிவித்த கருத்துகளுக்கு அவரை மறைமுகமாகச் சாடியுள்ளார் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா.

இந்தியத் திரையுலகின் முன்னணி சினிமா இணையதளம் 'கடந்த 10 ஆண்டுகளில் 100 சிறந்த நடிகர்கள்' என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் தனுஷ், மிஷ்கின், பாபி சிம்ஹா, ஐஸ்வர்யா ராஜேஷ், அஸ்வந்த், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல தமிழ்த் திரையுலகப் பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்றன.

இதில் இடம்பெற்ற முக்கியமான நடிகர்களை ஒன்றிணைந்து வீடியோ பேட்டியும் எடுத்து வெளியிட்டுள்ளனர். இதில் அயுஷ்மான் குரானா, பார்வதி, தீபிகா படுகோன், ரன்வீர் சிங், அலியா பட், மனோஜ் பாஜ்பாய், விஜய் தேவரகொண்டா மற்றும் விஜய் சேதுபதி இடம்பெற்றனர்.

இந்த விவாதத்தில் 'அர்ஜுன் ரெட்டி' படத்தைக் கடுமையாக விமர்சித்தார் பார்வதி. அப்போதே அவரது பேச்சுக்கு எதிர்வினையாற்றினார் விஜய் தேவரகொண்டா. ஆனால், இணையத்தில் பார்வதியின் பேச்சு பலராலும் பகிர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது பார்வதி பேச்சையும், 'அர்ஜுன் ரெட்டி' படம் தொடர்பான அவரது பார்வையையும் மறைமுகமாகத் தனது ட்விட்டர் பதிவில் விமர்சித்துள்ளார் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா.

இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில், "மக்கள் தங்கள் கருத்தைப் பொது வெளியில் பேசுவது பாராட்டப்பட வேண்டியது. அதுவும் ஒரு நல்ல விஷயத்துக்காகப் பேசும்போது. ஆனால், 'அர்ஜுன் ரெட்டி'யில் பெண் வெறுப்பு இருக்கிறது என்ற கருத்தும், விமர்சனமும் அபத்தமானது.

அர்ஜுன் தவறுகள் செய்பவன். அவனது எல்லை மீறிய கோபம் தான் அவனது குணத்தை இன்னும் மோசமாக்குகிறது. இந்த கோபத்தால் தான் அவன் மிக அதிகமான உணர்ச்சி மற்றும் உடல்ரீதியான வலியைச் சந்திக்கிறான். (படத்தின் இரண்டாம் பாதி இதைத்தான் சொல்கிறது)

காதலை உயர்த்திக் காட்டுவதில் என்ன தவறு? அது என்ன மாதிரியான காதலாக இருந்தால் என்ன. ரெவல்யூஷனரி ரோட், ப்ளூ வேலண்டைன் மற்றும் நோட்புக் ஆகிய படங்களில் பார்த்த காதல்கள் ஓர் உதாரணம். ஒருவர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்று இன்னொருவர் எப்படிச் சொல்லித் தர முடியும். என்னைத் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நான் உறவில் துன்புறுத்தல், வசவு ஆகியவற்றுக்கு எதிரானவன் தான். ஆனால் 'அர்ஜுன் ரெட்டி' அதெல்லாம் செய்யவில்லை. நான் மேற் சொன்ன படங்களைக் கண்டிப்பாக விமர்சகர்களும், கருத்து சொல்பவர்களும் ரசித்திருப்பார்கள்.

எனக்கு ’ஜோக்கர்’ பிடித்தது. ஆனால் அந்தக் கதாபாத்திரத்தை உயர்த்திப் பிடிக்கவில்லை என்று சொன்னால் பின் அவர்கள் காட்டியது என்னவென்று எனக்குத் தெரியவில்லை. அது ஒரு கற்பனைக் கதை என்றாலும் இறுதிக் காட்சியில் பல நூறு குடிமக்கள் ஜோக்கரைப் போற்றுவதும், பின்னணியில் வரும் சிம்பனி இசையும் உயர்த்திப் பிடிப்பதுதானே.

படம் பார்க்கும்போது ரசிகர்கள் அதற்கு விசில் அடித்துக் கைதட்டி ரசித்த காரணத்தால் மட்டுமே அவர்கள் அனைவரும் தொடர் கொலைகள் செய்வார்கள் என்று அர்த்தம் கிடையாது தானே? ஒரு வேளை ரசிகர்களில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் இருந்தால், அவர் மோசமாக வளர்க்கப்பட்டிருந்தால், அவரது பிள்ளைப் பருவம் மோசமாக இருந்திருந்தால், தவறான வழிகாட்டல் இருந்திருந்தால் அப்படிச் செய்யலாம். பலவீனமான அல்லது சுத்தமாக அறநெறிகள் இல்லாத ஒருவர் அப்படிச் செய்யலாம்.

'டார்க் நைட்' படம் வெளியானபோது கொலராடோவில் நடந்த சம்பவத்தைப் போல. அப்படித் தவறு செய்பவர்கள் எப்போதும் சாக்கு தேடிக்கொண்டே இருப்பார்கள். என்னவாக இருந்தாலும் சரி. அதை எப்படி சரி செய்வீர்கள். சமூகக் கொள்கையில் மாற்றங்கள் கொண்டு வரலாமா? இவற்றுக்கெல்லாம் ஒரு படத்தைக் குற்றம் சாட்டாதீர்கள். இவை அனைத்தும் எனது கருத்துகள் மட்டுமே” என்று தெரிவித்துள்ளார் ஆனந்த் தேவரகொண்டா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x