‘அசுரன்’ தெலுங்கு ரீமேக்: மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா மறுப்பு

‘அசுரன்’ தெலுங்கு ரீமேக்: மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா மறுப்பு
Updated on
1 min read

‘அசுரன்’ தெலுங்கு ரீமேக்கில், மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்கா மறுத்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 4-ம் தேதி ரிலீஸான படம் ‘அசுரன்’. தனுஷ் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், அவரது மனைவியாக மஞ்சு வாரியர் நடித்தார். டீஜே அருணாச்சலம், கென் கருணாஸ், பசுபதி, பிரகாஷ்ராஜ், அம்மு அபிராமி, பாலாஜி சக்திவேல் என ஏராளமான நடிகர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.

வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த இந்தப் படத்துக்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்தார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ராமர் எடிட்டராகப் பணியாற்றினார்.

பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம், சாதி பிரச்சினை, பஞ்சமி நிலங்கள் குறித்துப் பேசியது. படம் பார்த்த எல்லோருமே இந்தப் படத்தைக் கொண்டாடினர். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் இந்தி நடிகர்களும் வெற்றிமாறன் மற்றும் தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

சிவசாமி எனும் கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தினார் தனுஷ். இதுவரை அவர் நடித்த படங்களிலேயே 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்த முதல் படம் என்ற சாதனையை ‘அசுரன்’ நிகழ்த்தியுள்ளது.

இந்நிலையில், இந்தப் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்வதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தனுஷ் கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். எஸ்.தாணு மற்றும் டி.சுரேஷ் பாபு இணைந்து தயாரிக்கின்றனர். ஸ்ரீகாந்த் அட்டலா இப்படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தில் மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நடிக்க அனுஷ்காவை அணுகியுள்ளனர். ஆனால், அவர் மறுத்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எனவே, அவருக்குப் பதிலாக ஸ்ரேயா சரணிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in