

தெலுங்கு நடிகருக்கு அப்பாவாக நடிக்கிறார் என்று வெளியான செய்திக்கு, ‘நான் இன்னும் குழந்தைதான்’ என நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார் மாதவன்.
தெலுங்கு நடிகர் வருண் தேஜ், குத்துச்சண்டை வீரராக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். கிரண் கொரபட்டி இயக்கும் இந்தப் படத்தில், வருண் தேஜ் அம்மாவாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். ‘இறுதிச்சுற்று’ படத்தில் குத்துச்சண்டை பயிற்சியாளராக மாதவன் நடித்ததால், இந்தப் படத்திலும் அவர் அதே கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அந்தக் கதாபாத்திரம், வருண் தேஜின் அப்பா என்றெல்லாம் செய்திகள் வெளியாகின.
இந்தச் செய்தியைக் குறிப்பிட்டு ட்விட்டரில் ஒருவர் மாதவனிடம் கேள்வி எழுப்ப, ‘முற்றிலும் தவறான தகவல். நான் இன்னும் குழந்தைதான்’ என ஸ்மைலிகளுடன் நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார். அவருடைய இந்த பதிலைப் பார்த்து, ‘நீங்கள் இப்போது கல்லூரி மாணவராகக்கூட நடிக்கலாம்’ என நெட்டிசன்களும் ஜாலியாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
‘ராக்கெட்ரி: நம்பி விளைவு’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார் மாதவன். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. 1990-களில் ராக்கெட் தொழில்நுட்பத்தை வெளிநாடுகளுக்குக் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டவர் நம்பி நாராயணன். அதில் தன் பணியை இழந்து, சிறைவாசமும் அனுபவித்தார். சமீபத்தில் இந்த வழக்கில் அவர் நிரபராதி என்று விடுக்கப்பட்டார்.
இந்தப் படத்தில் நம்பி நாராயணனாக நடித்துள்ளதோடு, படத்தையும் இயக்கியுள்ளார் மாதவன். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளிலும் இப்படம் உருவாகி வருகிறது. இதில், நம்பி நாராயணன் மனைவி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சிம்ரன். இதன் மூலம் 17 ஆண்டுகள் கழித்து மாதவன் - சிம்ரன் ஜோடி இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ நடிகர் ரான் டொனாச்சி மற்றும் ‘டவுன்டவுன் அபை’ நடிகை பிலிஸ் லோகன் என இரண்டு ஹாலிவுட் நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். அத்துடன், பாலிவுட் மற்றும் தமிழ் சினிமாவைச் சேர்ந்த சிலரும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர்.
இதுதவிர, அனுஷ்கா பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள ‘நிசப்தம்’ படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வசனமே இல்லாத இந்தப் படம், ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகிறது. இதுதவிர, ‘பாகமதி’ இந்தி ரீமேக்கிலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மாதவன்.