

பிரபல தெலுங்கு நடிகர் ராஜசேகரின் கார் செவ்வாய்க்கிழமை இரவு ஹைதராபாத் நகரில் விபத்தை சந்தித்துள்ளது. இதில் அவருக்கு எந்தவிதமான பெரிய காயங்களும் ஏற்படவில்லை.
ராஜசேகர் தனது பென்ஸ் காரில், டிரைவருடன், விஜயவாடாவிலிருந்து ஹைதராபாத் திரும்பிக்கொண்டிருந்தபோது பெத்த கோல்கொண்டா பகுதிக்கு அருகே அவுட்டர் ரிங் சாலையில் சாலைக்கு நடுவில் இருக்கும் டிவைடரில் கார் எதிர்பாரத விதமாக மோதி இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து நடந்ததுமே உடனடியாக காருக்குள் இருக்கும் ஏர் பேக்குகள் செயல்பட்டுள்ளதால் பெரிய காயங்கள் தவிர்க்கப்பட்டன என்று தெரிகிறது. காரின் முன் பகுதி மொத்தமாக நொறுங்கியுள்ளது. அதிகாலை 2 மணியளவில் விபத்து நடந்துள்ளது.
டிரைவர் உடன் இருந்தாலும், ராஜசேகர் காரை ஓட்டியதாகத் தெரிகிறது. விபத்து நடந்ததுமே சாலையில் பயணித்துக்கொண்டிருந்தவர்கள் விரைந்து வந்து ராஜசேகரையும், டிரைவரையும் காரிலிருந்து மீட்டுள்ளனர். இருவருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு இருவரும் வீடு திரும்பினர். விபத்து பற்றி உடனடியாக போலீஸில் தெரிவித்துள்ள ராஜசேகர் தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
இந்த விபத்து குறித்து நடிகர் ராஜசேகரின் மனைவி, ஜீவிதா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தனது கணவருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை, போலீஸிடம் தெரிவிக்க வேண்டிய விஷயங்கள் உரிய முறையில் செய்யப்பட்டுவிட்டன, கார் சக்கரம் பழுதடைந்ததால் தான் இந்த விபத்து ஏற்பட்டது, ராஜசேகர் பற்றி விசாரித்த அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.