

இந்திய நீதித்துறையின் தூய்மையான ஞானத்தை எதிரொலிக்கிறது என்று அயோத்தி தீர்ப்பு குறித்து பவன் கல்யாண் கருத்து தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக நிலுவையிலிருந்த அயோத்தி நில விவகார வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று (நவம்பர் 8) தீர்ப்பு வழங்கியுள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம், அதற்கான அமைப்பை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு உருவாக்க வேண்டும்.
அதற்குப் பதில் இஸ்லாமியர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசும், உத்தரப் பிரதேச அரசும் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பு தொடர்பாக ஜனசேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், “ராம் ஜென்மபூமி பற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, இந்திய நீதித்துறையின் தூய்மையான ஞானத்தை எதிரொலிக்கிறது. பாரதத்தின் மக்களாகிய நாங்கள், தர்மத்தை நிலை நாட்டியதற்காக உச்ச நீதிமன்றத்தை மனதார ஏற்கிறோம். பாரத மாதாவுக்கு ஜே!” எனத் தெரிவித்துள்ளார் பவன் கல்யாண்.
ஜனசேனா கட்சி தொடங்கியிருக்கும் பவன் கல்யாண் திரையுலகிலிருந்து விலகி அரசியல் களத்தில் செயல்பட்டு வந்தார். தற்போது 'பிங்க்' படத்தின் ரீமேக் மூலம் திரையுலகிற்குத் திரும்ப இருப்பது குறிப்பிடத்தக்கது