

உபசானா ட்வீட் எதிரொலியால், சிரஞ்சீவி - ராம் சரண் இருவரையும் சந்திக்க பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியுடன் பாலிவுட் நடிகர்கள் மற்றும் திரைப்பட இயக்குநர்கள் இணைந்து மகாத்மாவின் 150-வது ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சிறப்பு அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சி பிரதமர் மோடியின் அதிகாரபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
ஷாரூக் கான், ஆமிர் கான், சோனம் கபூர், கங்கணா ரணாவத், ராஜ்குமார் ஹிரானி, ராஜ்குமார் சந்தோஷி, அஸ்வினி ஐயர் திவாரி, நிதேஷ் திவாரி, ஏக்தா கபூர், போனி கபூர் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். ஆனால், இந்நிகழ்வில் தென்னிந்தியத் திரையுலகினர் புறக்கணிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது.
இது தொடர்பாக தெலுங்கு நடிகர் ராம் சரணின் மனைவி உபாசனா, "அன்புள்ள நரேந்திர மோடி... தென்னிந்தியாவில் இருக்கும் நாங்கள் உங்களை மிகவும் மதிக்கிறோம். உங்களைப் பிரதமராக அடைந்ததற்காக மிகவும் பெருமை கொள்கிறோம். ஆனால், பெரும் ஆளுமைகள் மற்றும் கலாச்சார அடையாளங்களின் பிரதிநிதித்துவம் இந்தி நடிகர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு, தென்னிந்திய சினிமா முற்றிலும் புறக்கணிக்கப்படுவதாக நாங்கள் உணர்கிறோம். நான் என்னுடைய உணர்வுகளை வலியோடு பதிவு செய்கிறேன். இந்தக் கருத்தை ஆக்கபூர்வமான முறையில் கூறுகிறேன். அவ்வாறே எடுத்துக் கொள்ளப்படும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார். இந்தப் பதிவு பெரும் சர்ச்சையாக உருவானது.
தற்போது சிரஞ்சீவி - ராம் சரண் இருவரையும் நேரில் சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர் மோடி. இதனை ராம் சரண் பேட்டியொன்றில் உறுதிப்படுத்தியுள்ளார். ட்வீட் போடப் போகிறேன் என்று சொன்னால் வேண்டாம் எனச் சொல்வேன் என நினைத்து, மனைவி என்னிடம் சொல்லவில்லை என்றும், தற்போது அப்பாவையும் என்னையும் பிரதமர் மோடி நேரில் சந்திக்க அழைப்பு விடுத்திருப்பதாகவும் ராம் சரண் தெரிவித்துள்ளார்.
அந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் மீது தான் தவறிருக்குமே ஒழிய, பிரதமர் மோடி மீது தவறு இருக்காது என நம்புவதாகவும் ராம் சரண் குறிப்பிட்டுள்ளார். தற்போது வெளிநாட்டுச் சுற்றுப் பயணத்தில் இருக்கும் பிரதமர் மோடி, இந்தியா திரும்பியவுடன் சிரஞ்சீவி - ராம் சரண் இருவரையும் சந்திப்பார் எனத் தெரிகிறது.