

'பிங்க்' தெலுங்கு ரீமேக் மூலம், மீண்டும் திரையுலகிற்குத் திரும்பியுள்ளார் பவன் கல்யாண். ஸ்ரீராம் வேணு இயக்கவுள்ளார்.
அமிதாப் பச்சன், தாப்ஸி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பிங்க்'. இப்படத்தைக் குடியரசுத் தலைவர் தொடங்கி பல்வேறு அரசியல் பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள் என அனைவரும் பாராட்டினர். ‘பிங்க்’ படத்தின் தென்னிந்திய மொழிகளின் ரீமேக் உரிமையை பெரும் விலை கொடுத்து வாங்கினார் போனிகபூர்.
தமிழில் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க 'நேர்கொண்ட பார்வை' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்திருந்தனர். தமிழ் ரீமேக்கைத் தொடர்ந்து தெலுங்கு ரீமேக்கிற்கான பேச்சுவார்த்தையைத் தொடங்கினார் போனி கபூர்.
நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த 'பிங்க்' ரீமேக் பேச்சுவார்த்தை, தற்போது முடிவாகியுள்ளது. அரசியலுக்காகத் திரையுலகிலிருந்து விலகியிருந்த பவன் கல்யாண், அமிதாப் பச்சன் கதாபாத்திரத்தில் நடிக்கச் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை போனி கபூர் மற்றும் தில் ராஜூ இணைந்து தயாரிக்கவுள்ளனர். ஸ்ரீராம் வேணு இயக்கவுள்ளார்.
இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. விரைவில் பவன் கல்யாணுடன் நடிக்கவுள்ளவர்கள் அறிவிக்கப்பட்டு, படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.