

பாலக்காடு,
63வது கேரளா நாள் தினத்தன்று தேசிய விருது வென்ற மலையாளத் திரைப்பட இயக்குநர் அனில் ராதாகிருஷ்ணன் மேனன், வளரும் நடிகர் பினீஷ் பாஸ்தினை தரக்குறைவாக பேசியது கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
வியாழனன்று பாலக்காட்டில் அரசு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அனில் ராதாகிருஷ்ணன் மேனன், நடிகர் பினீஷ் பாஸ்தினுடன் மேடையைப் பகிர்ந்து கொள்ள மாட்டேன் என்று கூறியதோடு அவரை ‘மூன்றாம் தர’ நடிகர் என்று கூறியது கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
கல்லூரி மாணவர் சங்கம் இதழ் ஒன்றை அறிமுகம் செய்யும் விழாவில் நடிகர் பினீஷை தலைமை விருந்தாளியாக அழைத்திருந்தனர். இந்த விழாவில் ‘நார்த் 24 காதம்’ என்ற படத்துக்காக தேசிய விருது பெற்ற அனில் ராதாகிருஷ்ணன் மேனன் அழைக்கப்பட்டிருந்தார், ஆனால் இவரோ நடிகருடன் ஒரேமேடையைப் பகிர மாட்டேன் என்று மறுத்து விட்டார்.
இவர் மறுத்ததையடுத்து நடிகர் பாஸ்தின் மேடை வரை நடந்து சென்று பிறகு தரையில் அமர்ந்து, தன் எதிர்ப்பு அறிக்கையை வாசித்தார், அதில், “நான் மேல் ஜாதியைச் சேர்ந்தவன் அல்ல. நான் தேசியவிருது வென்றவனும் அல்ல. நான் ஒரு கொல்லர்தான். படங்களில் முக்கியத்துவமற்ற சிறுசிறு வேடங்களில் நடித்தவன். மதமோ, சாதியோ இங்கு விவகாரமல்ல, நானும் மனிதன் தான்” என்று வேதனையுடன் கூறியிருக்கிறார்.
இவர் கல்லூரிக்குள் நுழைந்த போது கல்லூரி முதல்வர் டி.பி.குலாஸ் இவரைத் தடுத்து மேடைக்குச் சென்றால் போலீஸை அழைக்க வேண்டி வரும் என்றும் எச்சரித்துள்ளார். பாஸ்தினின் இந்த போராட்டம் தற்போது பரவலாகி இயக்குநர் மேனன், மருத்துவக்கல்லூரி நிர்வாகம் மாணவர் சங்கத்தினர் மீது கடும் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. சமூகவலைத்தளங்களில் இந்த விவகாரம் வைரலாக 63வது கேரள நாள் கொண்டாட்டங்கள் பாழடைந்தன.
விஷயம் பூதாகாரமானதை அடுத்து பாஸ்தினிடம் மன்னிப்புக் கேட்ட இயக்குநர் மேனன், தான் அவரை மூன்றாம் தர நடிகர் என்று அழைக்கவில்லை என்று மறுத்தார், “நடிகர்களிடையே பாகுபாடு கிடையாது. அவரவர் பணிகளைச் செய்து வருகிறோம். சாரி, பினீஷ், நான் உண்மையில் மன்னிப்புக் கோருகிறேன்” என்றார்.
இதனையடுத்து கேரள மாநில தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடியினர் நல அமைச்சர் ஏ.கே.பாலன், நடிகர் பாஸ்தின் இழிவுபடுத்தப்பட்டது தெரியவந்தால் நிச்சயம் நடவடிக்கை மேற்கொள்வோம் என்றார்.
கேரள திரைப்பட ஊழியர்கள் சங்கம் இயக்குநர் மேனனிடம் விளக்கம் கேட்டிருப்பதோடு, இதனை வெட்கக் கேடானது என்று வர்ணித்துள்ளனர்.