Last Updated : 19 Oct, 2019 04:43 PM

 

Published : 19 Oct 2019 04:43 PM
Last Updated : 19 Oct 2019 04:43 PM

முதல் பார்வை: ஜல்லிக்கட்டு


இறைச்சிக் கூடத்துக்கு வந்த ஓர் எருமை தப்பித்து அந்த ஊரையே அதிர்ச்சியில் உறைய வைத்தால் அதுவே 'ஜல்லிக்கட்டு'.

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கசாப்புக் கடை வைத்துள்ளார் வர்கி (செம்பன் வினோத் ஜோஸ்). அவரின் உதவியாளர் ஆண்டனிக்கு (ஆண்டனி வர்கீஸ்) வர்கியின் தங்கை சோபி (சாந்தி பாலச்சந்திரன்) மீது காதல். ஒருநாள் அதிகாலையில் கசாப்புக் கடைக்கு வந்த எருமை, உயிர் பயத்தில் தப்பிக்கிறது. மூர்க்கமான அந்த எருமை ஊரில் உள்ள கடை, சர்ச், கட்சிக் கொடி, தோட்டம் என மொத்தப் பகுதிகளையும் கபளீகரம் செய்து ஊரையே அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. அந்த எருமையைப் பிடிக்க ஊரே திரள்கிறது. அதனால் சிலர் காயம் அடைகின்றனர். ஒருவர் மரணம் அடைகிறார். ஆனாலும், எருமையைப் பிடித்து தன்னை நிரூபிக்கப் போராடுகிறார் ஆண்டனி. இதனிடையே எருமையைப் பிடிக்க குட்டச்சன் (சாபுமோன்) வருகிறார். அவருக்கும் ஆண்டனிக்கும் ஏற்கெனவே தீராப் பகை இருக்கிறது.

இந்த சூழலில் எருமையைப் பிடிக்க முடிந்ததா, அந்த தீராப் பகை என்ன, எருமையை வைத்து ஊரில் நடக்கும் அரசியல் என்ன என்பதே திரைக்கதை.

ஹரீஷ் எழுதிய 'மாவோயிஸ்ட்' சிறுகதையைத் தழுவி 'ஜல்லிக்கட்டு' என்ற மலையாளப் படத்தை இயக்கியுள்ளார் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. இது அவருக்கு ஏழாவது படம். ஆனால், உணவு அரசியல், மாட்டு அரசியல், மனிதர்கள் அரசியல் என்று எல்லாவற்றையும் நுட்பமாகப் பதிவு செய்த விதத்தில் அசர வைக்கிறார்.

படத்தின் ஆதார பலம் ஓர் ஊரின் கலாச்சார வாழ்வியல் பதிவுதான். கதாநாயகன், நாயகி, டூயட், வில்லன் என்று எதுவும் இல்லை. ஆனால், இந்தப் படத்துக்கு அது தேவையும் இல்லை. இடுக்கி ஜாஃபர் படத்தின் பெரும்பாலான பகுதிகளில் மது அருந்துகிறார். ஆனால், அது எந்த விதத்திலும் நெருடலாகவோ உறுத்தலாகவோ இல்லை. மகளின் திருமண நிச்சயதார்த்த ஏற்பாட்டுக்காக சிக்கன் கேட்கப்போய் அவர் மாற்றுக் காதலில் ஈடுபடுவதாக நினைத்து அவரை அவமானப்படுத்தி அனுப்புகிறார்கள். அவர் ஒருவழியாக வீடு வந்து சேரும்போது, நிச்சயதார்த்தம் பிடிக்காமல் ஓடிப்போன பெண் பையுடன் வீடு திரும்புகிறார். அந்தக் காதலர்களின் பயணம் முறிந்ததற்கு பெரிய காரணம் எதுவுமில்லை. ஆனால், அக்காட்சி யதார்த்தத்தின் வார்ப்பில் தன்னை ஒப்புக்கொடுக்கிறது.

கசாப்புக் கடை நடத்தும் செம்பன் வினோத் ஜோஸ் எல்லா மனிதர்களையும் மிக இயல்பாக அணுகுகிறார். நாய்க்குக் கறி வேண்டும் என்று ஊரின் பெரிய புள்ளி கொஞ்சம் எக்ஸ்ட்ரா கறி கேட்கிறார். அவரை எதிர்த்துப் பேசாமல் தன் பணியாள் மீது கோபம் காட்டுவதன் மூலம் அவர் அடங்கிப் போகிறார்.

சாந்தி பாலச்சந்திரனுக்குப் படத்தில் பெரிய வேலையில்லை. அவரை எப்படியாவது தன் வழிக்குக் கொண்டுவர வேண்டும் என்று நினைக்கும் ஆண்டனி, மாடு பிடிக்கும் போராட்டத்துக்கு நடுவிலும் இழுத்து வைத்து ஒரு நீண்ட முத்தம் கொடுக்கிறார். அப்போதைய பாவனைகளில் சாந்தி பக்குவமான நடிப்பை நல்கியுள்ளார்.

குட்டச்சனாக நடித்திருக்கும் சாபுமோன் படத்தின் ஆச்சர்ய வரவு. அவர்தான் எருமையைப் பிடிக்கப் போகிறவர் என்று அந்த ஊரே கொண்டாடுகிறது. அவரின் ஒவ்வொரு செயலுக்கும் ஆஹான் போடுகிறது. அவரும் ஆண்டனிக்கும் தனக்குமான பகையின் காரணத்துக்கு சாபுமோன் நியாயம் செய்திருக்கிறார்.

ஆண்டனி வர்கீஸுக்கு மட்டும் படத்தில் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சாபுமோனைத் தூண்டி விட்டு குற்றச் செயலில் ஈடுபட வைப்பது, பின் அவரை போலீஸ் பிடிக்கக் காரணமாக இருப்பது, சாந்தி பாலச்சந்திரன் மீதான மையலை வெளிப்படுத்துவது, எருமையைப் பிடித்து கிணற்றில் தள்ளியதாக நம்பவைப்பது என சுயநலமும் பேராசையும் கொண்ட மனிதனின் நுண்ணிய உணர்வுகளை மிக லாவகமாக வெளிப்படுத்துகிறார்.

ஊரே அமைதி நிலையில் இருக்க சோன்பப்டி விற்றுச் செல்லும் சிறுவன், கெட்ட வார்த்தை பேசினால் நல்லதல்ல என அறிவுரை கூறி பின் தோட்டம் நாசமாவதால் அதே வார்த்தைகளைப் பயன்படுத்தும் மனிதர், மாட்டுக் கறி கிடைப்பதற்கான சூழல் இல்லாததால் பன்றிக் கறி கேட்கும் கிறித்தவப் பாதிரியார், மனைவியுடன் சண்டை போட்டு கவுரவம் காக்கும் எஸ்.ஐ. என்று படம் முழுக்க அபூர்வமான மனிதர்கள் விரவிக் கிடக்கிறார்கள்.

ஓட்டம் பிடித்த எருமையுடன் கூடவே பயணித்ததைப் போன்று கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவில் மேஜிக் செய்துள்ளார். சிங்கிள் ஷாட்டில் பல காட்சிகளை எடுத்து திகைப்பை வரவழைத்துள்ளார். பிரசாத் பிள்ளையின் பின்னணி இசை படத்துக்குக் கூடுதல் பலம் சேர்க்கிறது.

95 நிமிடங்களில் கச்சிதமாக படத்தைக் கொடுத்திருக்கிறார் எடிட்டர் தீபு ஜோசப். கடிகாரத்தின் ஓசை, கத்தையைப் பட்டை தீட்டுவது, சலசலக்கும் நீரோடையின் சப்தம், வண்டுகளின் ரீங்காரம், எருமையின் அசைவுகள் என்று சவுண்ட் டிசைன் வேற லெவல்.

எருமை ஏன் இரண்டாவது முறை தப்பிக்கிறது என்பதற்கான காரணத்தில் நம்பகத்தன்மை இல்லை. அந்த வேட்டை மனிதனின் பிழைப்பு வாதம் குறித்த காட்சிகள் மட்டும் தவிர்த்திருக்கலாம்.

ஹரீஷ், ஜெயகுமார் இணைந்து எழுதிய திரைக்கதை மனிதர்கள் மிருகத்தனத்தின் குணங்களோடு மெல்ல மெல்ல மாறி வருவதை அப்பட்டமாகப் பிரதிபலிக்கிறது. எருமையைப் பிடிக்கும் ஊர்ப் பெருமை மற்ற ஊர்க்காரர்களுக்கும் வர, அவர்களும் களத்தில் குதித்து டார்ச், தீப்பந்தங்களோடு வருவது பிரமிப்பை ஏற்படுத்துகிறது. அந்த ஜனத்திரளைக் கட்டுப்படுத்தி ஆளுமை செலுத்திய விதத்திலும் தொழில்நுட்பச் சவால்களை மிக நேர்த்தியாக சந்தித்த விதத்திலும் இயக்குநர் லிஜோ ஜோஸ் உயர்ந்து நிற்கிறார். மலையாள சினிமாவில் இன்னொரு மகுடமாக 'ஜல்லிக்கட்டு' மிளிர்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x