பாலகிருஷ்ணா போல் வசனம் பேசி பிரபலமான சிறுவன்: டெங்குவால் மரணம்:

பாலகிருஷ்ணா போல் வசனம் பேசி பிரபலமான சிறுவன்: டெங்குவால் மரணம்:
Updated on
1 min read

தனது வசனங்கள் மூலம் பிரபலமான சிறுவன் டெங்குவால் மரணமடைந்ததிற்கு பாலகிருஷ்ணா இரங்கல் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பாலகிருஷ்ணா. இவரது ஆக்ரோஷமான வசன உச்சரிப்புகள் மிகவும் பிரபலம். அவரை மாதிரியே பேசி நடித்துப் பிரபலமான குழந்தை நட்சத்திரம் கோகுல் சாய் கிருஷ்ணா.

தெலுங்கில் சில படங்கள் நடித்திருந்தாலும், கோகுல் சாய் கிருஷ்ணா தீவிரமான பாலகிருஷ்ணா ரசிகர். அவரது வசனங்களை அவரை மாதிரியே பேசி நடித்த வீடியோக்கள் இணையத்தில் மிகவும் பிரபலம். டெங்குகாய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோகுல் சாய் கிருஷ்ணா பெங்களூருவில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. கோகுல் சாய் கிருஷ்ணா மறைவுக்கு நடிகர் பாலகிருஷ்ணா தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில், "என்னுடைய ரசிகர்களை விட மதிப்புமிக்க விஷயம் வேறு எதுவும் எனக்கு இல்லை.

கோகுலுடைய மரணத்தால் நான் மிகவும் மனம் மனமுடைந்து போயிருக்கிறேன். அவர் என்னை மிகவும் நேசித்தார், அவருடைய வசன உச்சரிப்பையும் நடிப்புத் திறனையும் கண்டு எப்போதும் வியந்திருக்கிறேன். கோகுலின் ஆன்மாவுக்காகப் பிரார்த்தனை செய்கிறேன், அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களையும் உரித்தாக்குகிறேன்" என்று தெரிவித்துள்ளார் பாலகிருஷ்ணா.

கோகுல் சாய் கிருஷ்ணாவின் மறைவுக்குத் தெலுங்கு திரையுலகினர் பலரும் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in