6 வருடங்கள் கழித்து மீண்டும் இணையும் ஷாஜி கைலாஸ் - ப்ரித்விராஜ்
நடிகர் மற்றும் இயக்குநர் ப்ரித்விராஜ் சுகுமாரன் அடுத்ததாக நடிக்கவுள்ள படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
'கடுவா’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தை ஷாஜி கைலாஸ் இயக்குகிறார். இவர் தமிழில் 'வாஞ்சிநாதன்’, 'ஜனா’, 'எல்லாம் அவன் செயல்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர். 'கடுவா’ படத்தின் போஸ்டருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் இந்த போஸ்டரில், ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த 'நரசிம்ஹம்’ படத்தின் ஒரு பிரபல வசனமும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
6 வருடங்களுக்கு முன் ப்ரித்விராஜ், ஷாஜி இயக்கத்தில் ’சிம்ஹாசனம்’ என்ற படத்தில் நடித்திருந்தார். ஷாஜியின் கடைசி மலையாளப் படமும் 2013-ல் தான் வந்தது. தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின் இவர்கள் இருவரும் இணைந்திருக்கும் இந்தப் படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகவிருக்கும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
செவ்வாய்க்கிழமை அன்று தனது அடுத்த படத்தின் அறிவிப்பு குறித்த சிறிய முன்னோட்டமாக ஒரு கையில் சிகரெட்டும், சிலுவை இருக்கும் ப்ரேஸ்லட்டும் இருக்கும் போஸ்டரை , 6 வருடங்கள் கழித்து இணைகிறார்கள் என்ற வரிகளுடன் ப்ரித்விராஜ் பகிர்ந்திருந்தார். இன்று (அக்டோபர் 16) ப்ரித்விராஜின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
