

ஒவ்வொரு இந்தியரும் பார்க்க வேண்டிய படம் ’சைரா நரசிம்மா ரெட்டி’ என்று ஆளுநர் தமிழிசை பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி, சுதீப், அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா, அனுஷ்கா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'சைரா நரசிம்மா ரெட்டி'. தெலுங்கில் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், சிரஞ்சீவியின் நடிப்புக்குப் பலரும் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
இந்தப் படத்தைக் காண வேண்டும் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு நேரில் அழைப்பு விடுத்தார் சிரஞ்சீவி. இந்த அழைப்பை ஏற்று நேற்று (அக்டோபர் 9), 'சைரா நரசிம்மா ரெட்டி' படத்தைப் பார்த்து தனது ட்விட்டர் பதிவில் பாராட்டியுள்ளார்.
'சைரா நரசிம்மா ரெட்டி' படம் தொடர்பாக ஆளுநர் தமிழிசை தனது ட்விட்டர் பதிவில் "சிரஞ்சீவியின் 'சைரா நரசிம்மா ரெட்டி’ படம் பார்த்தேன். அவரது அற்புதமான, அட்டகாசமான நடிப்புக்குப் பாராட்டுகள். காந்திஜியின் 150-வது பிறந்தநாளுக்குச் சரியான அஞ்சலி. இன்றைய தலைமுறைக்கான சுதந்திரப் போராட்டத்தின் உயிர்ப்பான நினைவுகளை மீண்டும் கொண்டுவந்தது.
சுதந்திரப் போராட்டத்துக்குத் தென்னிந்தியாவின் பங்கு என்ன என்பது நன்றாகக் காட்டப்பட்டிருக்கிறது. உய்யலவாடா நரசிம்மா ரெட்டியின் நம்பகமான போர்வீரனாக ராஜா பாண்டி என்ற தமிழர் கதாபாத்திரம், தமிழ் தெலுங்கு சகோதரத்துவத்தின் ஆவணம்.
'சைரா நரசிம்மா ரெட்டி' அருமையான திரைப்படம். ஒவ்வொரு இந்தியரும் பார்க்க வேண்டிய படம். கடந்த 20 வருடங்களில் நான் 'காலா,' இப்போது இந்தப் படம் பார்த்திருக்கிறேன். வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திரப் போராட்டத்தைத் திரையில் கொண்டு வர சிரஞ்சீவி செய்துள்ள முயற்சிகள் பாராட்டத்தக்கது. உங்கள் கனிவான மனதுக்கும், தற்போதைய தேவையான தேசத்தின் சுதந்திரப் போராட்டம் குறித்த உங்கள் பார்வை குறித்தும் பாராட்டுகள்." என்று தெரிவித்துள்ளார் தமிழிசை.