முதல் பார்வை: சைரா நரசிம்மா ரெட்டி

முதல் பார்வை: சைரா நரசிம்மா ரெட்டி
Updated on
3 min read

முதல் இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு முன்னதாக ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய ஒரு சிற்றரசனின் கதையே 'சைரா நரசிம்மா ரெட்டி'.

ஆந்திராவில் உய்யலவாடா நரசிம்மா ரெட்டி (சிரஞ்சீவி) ஒரு சிற்றரசராக ஆட்சி செய்து வந்தார். ஆங்கிலேயர்கள் இந்தியர்களின் வளங்களைக் கண்டு அடிமைப்படுத்திய நிலையில் சிற்றரசருக்கான அதிகாரம் இல்லாவிட்டாலும் அவரை அரசராகவே பாவித்து மக்கள் வணங்கியும் மரியாதையும் செலுத்தியும் வருகின்றனர். வறட்சி, பசி, பட்டினியில் தவிக்கும் மக்களிடம் ஆங்கிலேயர்கள் வரிகட்டச் சொல்லி வற்புறுத்த, அதை எதிர்த்து ஆங்கிலேயர்களின் பகையை சம்பாதிக்கிறார் நரசிம்மா ரெட்டி. இதனால் அடுத்தடுத்து அவரை ஆங்கிலேயப் படைகள் குறி வைக்கின்றன.

ஆங்கிலேயர்களுடன் போரிட்டு வெல்லும் நோக்கில் தன்னுடன் இருக்கும் 60க்கும் மேற்பட்ட சிற்றரசர்களை இணைக்கும் முயற்சியில் நரசிம்மா ரெட்டி ஈடுபடுகிறார். மக்கள் கூட்டத்துக்குப் பிறகு சிற்றரசர்கள் நரசிம்மா ரெட்டியுடன் இணைந்து ஆங்கிலேயப் படைகளுக்கு எதிராகப் போராடுகின்றனர். இதனிடையே நடக்கும் துரோகத்தால் நரசிம்மா ரெட்டியை ஆங்கிலேயப் படை கைது செய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்துகிறது.

அதற்குப் பிறகு நரசிம்மா ரெட்டி என்ன ஆகிறார், அவரின் வீர உணர்வும் சுதந்திர வேட்கையும் என்ன ஆனது, நரசிம்மா ரெட்டிக்கு யாரால் துரோகம் நிகழ்ந்தது? போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

'பாகுபலி'க்குப் பிறகு தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் 'சைரா நரசிம்மா ரெட்டி'. சரித்திரப் பின்னணியை மையமாகக் கொண்ட படத்தை இயக்கியுள்ளார் சுரேந்தர் ரெட்டி. இது அவருக்கு 9-வது படம். 8 படங்களை இயக்கிய அனுபவமும் தொழில்நுட்பக் கலைஞர்களிடம் வேலை வாங்கிய விதமும் அவரின் ஆளுமைக்கான சான்றாக இப்படத்துக்குக் கை கொடுத்துள்ளது.

1857-ல் இந்திய சுதந்திரப் போராட்டம் நடைபெற்ற நிலையில், அதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்னதாக ஆந்திராவின் குட்டலூருவில் ஆங்கிலேயப் படையை எதிர்த்து நின்று போரிட்டவர் உய்யலவாடா நரசிம்மா ரெட்டி. சுதந்திரப் போராட்டத்துக்கான தீயை வளர்த்த பெரு நெருப்பு என்று வரலாறு அவரைக் குறிப்பிடுகிறது. அப்படிப்பட்ட நரசிம்மா ரெட்டியை ஆங்கிலேயப் படை கைது செய்து பொதுமக்கள் மத்தியில் தூக்கிலிட்டது. அவரது தலையை சுமார் 30 வருடங்கள் வரை அகற்றாமல் கோட்டையின் முகப்பில் வைத்திருந்தது. போராட்டத்தில் குதிக்கும் மக்களை அச்சுறுத்துவதற்காகவே ஆங்கிலேயர்கள் இப்படிச் செய்தனர்.

இந்த வரலாறு ஆந்திராவின் எல்லையைக் கடந்து இந்திய தேசத்துக்குத் தெரிய வேண்டும் என்ற நோக்கத்திலும் நரசிம்மா ரெட்டியின் தியாகம், புகழ் குறித்து அனைவரையும் சென்று சேர வேண்டும் என்ற அடிப்படையிலும் 'சைரா நரசிம்மா ரெட்டி' படம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த விதத்தில் இயக்குநர் சுரேந்தர் ரெட்டி அந்த நோக்கத்தை நிறைவேற்றியுள்ளார். ஆனால், ஒரு சரித்திரப் படம் அதனால் மட்டும் முழுமையடையும் என்று சொல்லிவிடமுடியாது. படத்தின் தொடக்கக் காட்சியாகவோ அல்லது நரசிம்மா ரெட்டியின் அறிமுகக் காட்சியாகவோ இருந்திருக்க வேண்டிய காட்சி ஒரு மணிநேரத்துக்குப் பிறகே வந்து பார்வையாளர்களை நிமிர்ந்து உட்கார வைக்கிறது.

அதற்கு முன்னதாக வரும் நரசிம்மா ரெட்டியின் கதாபாத்திரத்தை நிறுவுவதற்காக தவம், வீரம், காதல், குழந்தைத் திருமணம், யாகம், தீபம் ஏற்றுதல், ஏழைக்கு இரங்குதல், வீர உணர்ச்சியை ஊட்டும் விதத்தில் பேசுதல் எனப் பல அம்சங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை தயவு தாட்சண்யமின்றித் தவிர்த்திருக்கலாம்.

நரசிம்மா ரெட்டி கதாபாத்திரத்துக்கு சிரஞ்சீவி வலு சேர்த்துள்ளார். தண்ணீருக்குள் இருந்து தவம் இருக்கும் அமைதியான குணத்தையும், வெள்ளையனை விரட்டும் ஆவேசத்திலும், தமன்னா மீதான அன்பைச் சொல்லும் விதத்திலும், திருமணதுக்குக் கட்டுப்பட்டு நெறி பிறழாது நடக்கும்போதும், வீரர்களை ஒன்றிணைத்து மக்கள் தலைவனாக உயரும் போதும் மனதில் நிறைகிறார். அரவிந்த்சாமியின் பின்னணிக்குரல் சிரஞ்சீவிக்கு ஆரம்பத்தில் சற்று உறுத்தலாகத் தெரிந்தாலும் போகப்போக அது குறையாகத் தெரியவில்லை.

சிரஞ்சீவிக்குப் பெருமை சேர்க்கும் விதத்திலேயே தமன்னா, நயன்தாரா, அனுஷ்கா என்று முப்பெரும் நாயகிகள் இதில் நடித்துள்ளனர் என்று சொல்லலாம். ஜான்சிராணியாக நரசிம்மா ரெட்டியின் வரலாறைச் சொல்லும் அனுஷ்காவுக்குப் படத்தில் பெரிய முக்கியத்துவம் இல்லை. நரசிம்மா ரெட்டியின் மனைவி சித்தம்மாவாக நயன்தாரா தன் பங்களிப்பை நிறைவாகச் செய்துள்ளார். கண்ணீருடன் ஒரு முறை உங்களைப் பார்த்துக்கவா என்று கணவனிடம் கேட்கும் நயன், என் தலைவனையே போருக்கு அனுப்பியிருக்கேன் என்று சொல்லும் அளவுக்கு மாற்றம் அடைவது என பக்குவமான நடிப்பை வழங்கியுள்ளார். இவர்கள் இருவரைக் காட்டிலும் தமன்னா நாட்டியக் கலைஞராகவும், சிரஞ்சீவியின் காதலியாகவும் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.

சிரஞ்சீவியின் குருவாக அமிதாப் பொருத்தமான பாத்திர வார்ப்பு. நிழல்கள் ரவியின் பின்னணிக் குரலும் நெருடல் இல்லாமல் சீராக உள்ளது.

நாசர், அஜய் ரத்னம், ஜெகபதி பாபு, ஆனந்த், சுதீப், விஜய் சேதுபதி, ரோகிணி என பல நட்சத்திரங்கள் படத்தில் இருக்கிறார்கள். இதில் சுதீப் அதிக கவன ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளார். அவரின் கதாபாத்திரப் பரிமாணங்கள் நம்பும்படி உள்ளன. ராஜபாண்டி கதாபாத்திரத்தில் தமிழ் வீரனாக விஜய் சேதுபதி இயல்பாக நடித்துள்ளார்.

கோட்டை, போர்க்களக் காட்சிகளில் ரத்னவேலுவின் கேமரா நம் தோள்களில் பயணிப்பதைப் போல பிரமிப்பைத் தருகிறது. அமித் திரிவேதியின் இசையில் டைட்டில் பாடல் உத்வேகம் அளிக்கிறது. ஜூலியஸ் பாக்கியத்தின் பின்னணி இசை படத்தின் ஆகச்சிறந்த பலம். ஸ்ரீகர் பிரசாத் காதல் காட்சிகளுக்குக் கத்தரி போட்டிருக்கலாம்.

ஒரு நதியின் போக்கைப் போல நரசிம்மா ரெட்டியின் வாழ்க்கை வரலாறு சொல்லப்படுகிறது. ஆனால், கதாநாயகக் கட்டமைப்பில் சிரஞ்சீவி சில காட்சிகளில் மட்டுமே அப்ளாஸ் பெறுகிறார். ஆங்கிலேயரை எதிர்த்து வரி கொடுக்க முடியாது என்று பயமுறுத்தி அனுப்புவது, நரசிம்மா ரெட்டியாக தண்ணீருக்குள் இருந்துகொண்டு ஆங்கிலேயப் படைத் தளபதியின் உயிரைப் பறித்து முழக்கமிடுவது, தூக்குமேடைக் காட்சியில் சுதந்திர உணர்வு கொப்பளிக்கப் பேசி எதிரியை மரணத் தருவாயிலும் பந்தாடுவது என சில காட்சிகள் சிரஞ்சீவியின் நாயகத்தன்மைக்கு ஆதாரமான சான்றுகள்.

முதல் பாதியின் தொடக்கக் காட்சிகள் கதாநாயகன் எப்படிப்பட்டவன் என்பதைச் சித்தரிக்கவே அதிக நேரம் எடுத்துக்கொள்கின்றன. நேராகக் கதைக்களத்துக்குள் வராமல் இழுவையாக நீள்கிறது. இரண்டாம் பாதி எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் தேமே என்று நகர்கிறது. சென்டிமென்ட் காட்சிகள் அவ்வளவாக எடுபடவில்லை. பார்வையாளர்கள் ஒன்றமுடியாத அளவுக்கு அழுத்தமில்லாமல் கடந்து செல்கிறது. 'வீரபாண்டிய கட்டபொம்மன்' திரைப்படம் நினைவுக்கு வந்து போவதையும் தவிர்க்க முடியவில்லை.

கதையின் போக்கைப் பார்வையாளர்கள் ஊகித்துவிட்ட பிறகு அதன் திசை கொஞ்சமும் மாறாமல் அப்படியே பயணிப்பது அலுப்பையும் சோர்வையும் வரவழைக்கிறது. கலை இயக்கம், உடைகள், மேக்கப், ஒலி வடிவமைப்பு, கிராபிக்ஸ், சண்டைக் காட்சிகள் என்று அனைத்திலும் நேர்த்தி பளிச்சிடும் சைரா நரசிம்மா ரெட்டி திரைக்கதையால் மட்டும் கொஞ்சம் சறுக்கலைச் சந்தித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in