

மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'லூசிஃபர்' படத்தின் தெலுங்கு உரிமையை வாங்கியுள்ளார் சிரஞ்சீவி.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான 'லூசிஃபர்' திரைப்படம் மலையாளத் திரைப்பட உலகில் பல வசூல் சாதனைகளைப் படைத்தது. இதுவரை வெளியான மலையாளப் படங்களில் அதிக வசூல் என்ற பெருமையையும் பெற்றது. 'மொழி', 'காவியத் தலைவன்' உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்த நடிகர் ப்ரித்விராஜின் இயக்கத்தில் வெளியான முதல் படம் இது.
இந்தப் படம் தமிழில் டப்பிங் செய்து வெளியானாலும், தெலுங்கில் வெளியாகவில்லை. இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை வாங்கியிருக்கிறார் சிரஞ்சீவி. இதனை நடிகர் மற்றும் இயக்குநர் ப்ரித்விராஜ் உறுதி செய்துள்ளார்.
கேரளாவில் நடைபெற்ற 'சைரா நரசிம்மா ரெட்டி' படத்தின் விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் ப்ரித்விராஜ். இதில் சிரஞ்சீவி, தமன்னா உள்ளிட்ட படக்குழுவினரும் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தொடர்பாக ப்ரித்விராஜ் தனது ட்விட்டர் பதிவில், "கேரளாவில் ’சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தின் விழாவில் சிரஞ்சீவியுடன் இருக்கிறேன். என்ன ஒரு தங்கமான மனிதர். பணிவு, கண்ணியத்தின் மனிதவுருவம். நீங்கள் ’லூசிஃபர்’ படத்தின் (தெலுங்கு) உரிமையை வாங்கியது எனக்கு மிக்க மகிழ்ச்சி. ’சைரா நரசிம்மா ரெட்டி’ படத்தில் நீங்கள் அழைத்தும் நடிக்க முடியாமல் போனது குறித்து என்றும் வருந்துவேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், 'லூசிஃபர்' படத்தின் முடிவில் மோகன்லாலின் கதாபாத்திரத்தின் உண்மைப் பெயர் குரேஷ அப்ராம். அவர் மிகப்பெரிய கேங்க்ஸ்டர் என்பது தெரிய வரும். இந்தப் படத்தின் தொடர்ச்சியாக 'எம்புரான்' என்ற இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது. எம்புரானைத் தொடர்ந்து இந்தக் கதை மேலும் ஒரு பாகம் வரை நீளும் என்று தெரிவித்துள்ளார் ப்ரித்விராஜ்