

அப்பா மம்மூட்டி எப்போதுமே தன்னை ரிஸ்க் எடுக்க ஊக்கப்படுத்துவார் என்று துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.
மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான். இவரும் மலையாளத்தில் நாயகனாக அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து தமிழ், இந்தி என நடித்து வருகிறார். இந்தியில் தற்போது சோனம் கபூருடன் நடித்துள்ள 'தி சோயா பேக்டர்' படம் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தை விளம்பரப்படுத்த அளித்துள்ள பேட்டியில், அப்பாவிடம் இருந்து தான் வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்கப் பழகியதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக துல்கர் சல்மான், "என் அப்பா எப்போதும் என்னை ரிஸ்க் எடுக்க ஊக்கப்படுத்துவர். என் ஆரம்ப நாட்களிலிருந்தே அப்படித்தான். சாப்பாடும், தங்குமிடமும், மற்ற அடிப்படை வசதிகளும் உனக்கு இருக்கிறது.
எனவே ஒரு இளைஞனாக நீ ரிஸ்க் எடுக்கவில்லையென்றால், பரிசோதனை முயற்சிகள் செய்யவில்லை என்றால் யார் செய்வார்கள் என்று அப்பா சொல்லுவார். தவறுகள் செய்யாமல் உன்னால் உன் குணத்தையும் மேம்படுத்திக் கொள்ள முடியாது, கலைஞனாக வளரவும் முடியாது.
ஒரு படம் தோற்றால் நான் தெருவுக்குச் செல்லப்போவதில்லை இல்லையா? அதனால் நான் ஏன் திட்டமிட்டு ரிஸ்க் எடுக்க வேண்டும்? என் அப்பா மிகவும் பிடிவாதமானவர். திரைப்படத்துறையில் என்னை கை பிடித்து அழைத்துச் செல்வதில் அவருக்கு நம்பிக்கை இல்லை" என்று தெரிவித்துள்ளார் துல்கர் சல்மான்.
மேலும் தமிழ், மலையாளம், இந்தி என மாறி மாறி நடிப்பதால் மொழிப் பிரச்சினையாக இல்லையா என்ற கேள்விக்கு, "பள்ளியில் எனது இரண்டாவது மொழி இந்தி. நான் சென்னையில் வளர்ந்தவன். எனவே தமிழ் நன்றாக வரும். நானும் என் சகோதரியும் வீட்டில் மலையாளம் பேசுவதை அம்மா உறுதி செய்தார். அப்படியாவது தாய் மொழியைத் தெரிந்து கொள்வோம் என்று. நான் ஆங்கிலத்தில் யோசிப்பவன். என்ன மொழியில் பேசினாலும், யோசிப்பதை அந்த மொழிக்கு என் மனதிலேயே மொழிமாற்றிதான் பேசுவேன்.
இந்த சூழல் எனது பள்ளிப்படிப்பினால்தான். ஆரம்பத்தில் நான் நல்ல மலையாளம் பேசுவதில்லை என என் பெற்றோர்கள் சொல்வார்கள். அது ஒவ்வொரு தலைமுறைக்கான விஷயம் என நினைக்கிறேன். நான் ஆங்கில வழிக் கல்வி பயின்றேன். அதனால் அந்த மொழியை நான் கற்றிருப்பது இயற்கையே. ஆனால் நான் நடிகனாவேன் என்று அப்போது எனக்குத் தெரியாது.
ஆனால் சிறு வயதில் பல்வேறு மொழிகளை கற்பதில் நான் எப்போதும் ஆர்வம் கொண்டிருந்தேன். அதனால் நான் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கிறேன். எல்லாவற்றையும் நானே சுயமாகச் செய்வதில் என் அப்பாவுக்கு மகிழ்ச்சி என்றே நினைக்கிறேன். மலையாளம் பேசுவதை விடச் சாதம் சாப்பிடுவதுதான் என்னிடம் இருக்கும் அதிகபட்ச மலையாள வழக்கம்” என்று தெரிவித்துள்ளார் துல்கர் சல்மான்.
ஐ.ஏ.என்.எஸ்