

தெலுங்கு சினிமாவில் நடித்து வந்த பிரபல நகைச்சுவை நடிகர் வேணு மாதவ் உடல்நலக் குறைவால் புதன்கிழமை (இன்று) மதியம் 12.20க்கு உயிரிழந்தார். அவருக்கு வயது 39.
மிமிக்ரி கலைஞராக இருந்து நகைச்சுவை நடிகராக மாறியவர் வேணு மாதவ். 1996-ல் 'சம்பிரதாயம்' என்ற படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்தார். இதுவரை 170 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழிலும் 'என்னவளே', 'காதல் சுகமானது' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 2016-ல், 'டாக்டர் பரமானந்தய்யா' ஸ்டூடண்ட்ஸ் என்ற படத்தில் நடித்திருந்தார்.
கடந்த மூன்று வருடங்களாக கல்லீரல் பிரச்சினை காரணமாக சிகிச்சை மேற்கொண்டு வந்திருந்த வேணு மாதவ், படங்களில் நடிக்கவில்லை. இரண்டு வாரங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேணு மாதவ் ஞாயிற்றுக்கிழமை அன்று வீட்டுக்குத் திரும்பினார்.
மீண்டும் செவ்வாய்க்கிழமை அன்று கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியாகச் சொல்லப்படுகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வேணு மாதவ் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 12.20க்கு உயிரிழந்ததை மருத்துவர்களும், அவரது குடும்பத்தினரும் உறுதி செய்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம், தெலங்கானாவின் கோடாட் தொகுதியிலிருந்து தேர்தலில் போட்டியிட வேணு மாதவ் ஆர்வம் காட்டியது நினைவுகூரத்தக்கது. வேணு மாதவ்வின் மறைவுக்கு தெலுங்கு சினிமா ரசிகர்களும், செய்தியாளர்களும், நட்சத்திரங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.