

மோகன்லால் நடிப்பில் வெளியான 'லூசிஃபர்' படத்தின் பாகங்கள் தொடர்ச்சியாக இன்னும் இரண்டு வெளியாகும் என இயக்குநர் ப்ரித்விராஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் வெளியான 'லூசிஃபர்' திரைப்படம் மலையாள திரைப்பட உலகில் பல வசூல் சாதனைகளைப் படைத்தது. இதுவரை வெளியான மலையாளப் படங்களில் அதிக வசூல் என்ற பெருமையையும் பெற்றது. 'மொழி', 'காவியத் தலைவன்' உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் ப்ரித்விராஜின் இயக்கத்தில் வெளியான முதல் படம் இது.
'லூசிஃபர்' படத்தின் முடிவில் மோகன்லாலின் கதாபாத்திரத்தின் உண்மைப் பெயர் குரேஷ அப்ராம். அவர் மிகப்பெரிய கேங்க்ஸ்டர் என்பது தெரிய வரும். இந்தப் படத்தின் தொடர்ச்சியாக 'எம்புரான்' என்ற இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ப்ரித்விராஜ், எம்புரானைத் தொடர்ந்து இந்தக் கதை மேலும் ஒரு பாகம் வரை நீளும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் கதையை 11 பகுதிகள் கொண்ட வெப் தொடராக இயக்கும் திட்டமும் இருந்தது என்று சொன்ன ப்ரித்விராஜ், மூன்றாம் பாகம் திரைப்படம் மற்ற இரண்டு படங்களை விட இன்னும் தீவிரமாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.