

தாதா சாகேப்புக்குத் தான் அமிதாப் விருது கொடுக்க வேண்டும் என்று ட்வீட் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் இயக்குநர் ராம் கோபால் வர்மா.
சமூக வலைதளத்தில் எப்போதுமே சர்ச்சைக் கருத்துகளுக்குப் பெயர் போனவர் இயக்குநர் ராம் கோபால் வர்மா. ட்வீட்களைத் தாண்டி சமீபத்தில் 'இஸ்மார்ட் ஷங்கர்' படத்தைப் பார்க்க பைக்கில் ஹெல்மெட் இன்றி பயணித்தார். அதைப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து காவல்துறையைக் கிண்டல் செய்து ட்வீட் செய்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு அபராதம் விதித்தது காவல்துறை.
தற்போது இந்திய அரசாங்கம் வழங்கும் உயரிய விருதான தாதா சாஹிப் பால்கே விருதைக் கிண்டல் செய்து, பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார் ராம் கோபால் வர்மா. நேற்று (செப்டம்பர் 24) இந்தியத் திரையுலகின் முக்கிய நடிகரான அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவித்தது மத்திய அரசு.
இந்தி, தமிழ், தெலுங்கு என அனைத்து திரையுலகப் பிரபலங்களும் அமிதாப் பச்சனுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். அமிதாப் பச்சனுக்கு வாழ்த்து தெரிவித்து இயக்குநர் ராம் கோபால் வர்மா “தாதா சாகேப் குறித்த உயர்ந்த விஷயம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் அவர் எடுத்த 'ராஜா ஹரிஷ்சந்திரா' படத்தை என்னால் எவ்வளவு முறை முயன்றும் பத்து நிமிடங்களுக்கு மேல் பார்க்க முடியவில்லை.
ஆனால், உங்கள் பல படங்களைப் பத்து முறைக்கு மேல் பார்த்திருக்கிறேன். தாதா சாகேப்புக்குத்தான் அமிதாப் பச்சன் விருது தர வேண்டும். இதற்கு முன் இந்த தாதா சாகேப் விருது வாங்கியவர்கள் யாரும் உங்களுக்கு இணையல்ல. நீங்கள் நெருப்பு என்றால் அவர்கள் தீக்குச்சி கூட கிடையாது. அதனால் தாதாவும் என்னை ஈர்க்கவில்லை, (விருது கொடுத்த) குழு உறுப்பினர்களும் என்னை ஈர்க்கவில்லை. இவர்களில் யாரும் தாதாவின் ஒரு படத்தைக் கூட பார்த்திருக்க மாட்டார்கள் என நான் பந்தயம் வைக்கிறேன்” என்று தனது ட்விட்டர் பதிவில் ராம் கோபால் வர்மா தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. ஆனால், இந்த ட்வீட்கள் சர்ச்சையாகும் என்பதை உணர்ந்து உடனடியாக ட்வீட்டை நீக்கிவிட்டார்.
இந்தியத் திரையுலகில் முதல் படமாக வெளியான 'ராஜா ஹரிஷ்சந்திரா' படத்தை இயக்கி, தயாரித்தவர் தாதா சாகேப் பால்கே. அவருடைய நினைவாகவே மத்திய அரசு வருடந்தோறும் 'தாதா சாகேப் பால்கே' விருது வழங்கி கவுரவித்து வருவது நினைவுகூரத்தக்கது. அகில இந்திய அளவில் பாரத ரத்னா விருது எவ்வளவு முக்கியமோ, அதே போல் திரையுலகில் 'தாதா சாகேப் பால்கே' விருது பெறுவது மிகப்பெரிய கவுரவமாகும்.
இதுவரை சிவாஜி கணேசன், ஆஷா போஸ்லே, இயக்குநர் விஸ்வநாத், வினோத் கண்ணா, கே.பாலசந்தர், அமிதாப் பச்சன் என முக்கியமான திரையுலகப் பிரபலங்களுக்கே இந்த விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
ராம் கோபால் வர்மா நீக்கிய ட்வீட்கள்: