

இந்தியத் திரையுலகில் பிரபலமான சண்டைப் பயிற்சி இயக்குநரான பீட்டர் ஹெய்ன் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.
தமிழ்த் திரையுலகில் 'மின்னலே' படத்தின் மூலம் சண்டைப் பயிற்சி இயக்குநராக அறிமுகமானவர் பீட்டர் ஹெய்ன். அதற்குப் பிறகு இவரது சண்டைக் காட்சி வடிவமைப்பை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தார்.
தற்போது இந்தியத் திரையுலகில் தயாராகும் பல பிரம்மாண்டமான படங்களின் சண்டைக் காட்சிகள் இவரது மேற்பார்வையில் தான் உருவாகி வருகிறது. 'பாகுபலி', 'பாகுபலி 2', 'எந்திரன்', 'ஸ்பைடர்', 'பேட்ட', 'புலிமுருகன்', 'ரேஸ் 2' உள்ளிட்ட பல படங்களின் சண்டைக் காட்சிகள் இவர் வடிவமைத்ததுதான். தற்போது 'காப்பான்', 'அசுரன்', 'க/பெ ரணசிங்கம்', 'இந்தியன் 2' ஆகிய படங்களில் பணிபுரிந்து வருகிறார்.
பல்வேறு படங்களுக்கு சண்டைப் பயிற்சி இயக்குநராக பணிபுரிந்தவர், முதன்முறையாக இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். இந்தப் புதிய படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது முடிவாகவில்லை. ஆனால், இவரோ தெலுங்கில் தான் இயக்குநராக அறிமுகமாகிறார். யாரெல்லாம் நடிக்கிறார்கள் உள்ளிட்ட அறிவிப்பு விரைவில் அறிவிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.