

வழக்கமான காதலர்களுக்குள் நடக்கும் வழக்கமான சண்டைகள்தான் ‘லவ் ஆக்ஷன் ட்ராமா’.
தன் உறவுக்காரப் பெண்ணின் திருமணத்துக்கு வரும் சென்னையைச் சேர்ந்த நயன்தாராவைப் பார்த்ததும் நிவின் பாலிக்குப் பிடித்து விடுகிறது. நயனுக்கும் நிவினைப் பிடித்துவிடுகிறது. ஆனாலும், வெளிப்படையாக நயன் ஒப்புக் கொள்ளவில்லை. எனவே, நயனின் அன்பைப் பெறுவதற்காக சென்னை செல்கிறார் நிவின் பாலி.
நிவின் பாலி சின்னச் சின்னக் குறும்புகளால் நயனை ஈர்த்தாலும், அவரின் சந்தேகம் மற்றும் குடிப் பழக்கத்தால் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை நடக்கிறது. நிவின் பாலி - நயன்தாரா காதலுக்கு எப்படியெல்லாம் தடைகள் ஏற்பட்டன? அதிலிருந்து அவர்கள் தப்பித்தார்களா? என்பதுதான் படத்தின் கதை.
காதல் நாயகனாக நிவின் பாலி ரசிக்க வைக்கிறார். நயன்தாராவின் அன்பைப் பெற அவர் செய்யும் சின்னச் சின்னக் குறும்புகளை ரசித்துக்கொண்டே இருக்கலாம். காதல், அதனால் உண்டாகும் வலி இரண்டையும் அழகாகச் செய்துள்ளார் நயன். காதலையும் சரி, வலியையும் சரி... பார்வையாளனுக்கு அப்படியே கடத்தி விடுகிறார் நயன்.
நிவின் பாலியின் நண்பனாக வரும் அஜு வர்கீஸ், நண்பர்களுக்கே உரிய வழக்கமான மடத்தனங்களோடு, நிவின் பாலிக்கு நல்லதும் செய்கிறார். நயனின் தோழியாக நடித்துள்ள தன்யா பாலகிருஷ்ணா, அவரின் கணவராக நடித்துள்ள ப்ரஜின், அவர்களுடைய நண்பர்களாக நடித்துள்ள ஸ்ரீனிவாசன், சுந்தர் ராம் ஆகியோர் கவனிக்க வைக்கின்றனர்.
முதல் பாதி படத்தை ரசிக்க வைக்கும் திரைக்கதை, இரண்டாம் பாதியிலும் அப்படியே தொடர்வது சலிப்படைய வைக்கிறது. காதலர்களுக்குள் நடக்கும் சின்னச் சின்ன சண்டைகள், ஒருகட்டத்துக்குப் பிறகு நகர்ந்து அடுத்த நிலைக்குச் செல்ல வேண்டும். ஆனால், படம் முழுவதும் அதுவே ஆக்கிரமித்துக் கொள்வது படத்தின் மிகப்பெரிய மைனஸ். அறிமுகமே இல்லாத யாரோ சிலர் சொன்னதை நம்பி காதலியை சந்தேகப்படும் காதலன், குடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு மறுபடி மறுபடி குடிப்பது என பழைய கதையை பட்டி டிங்கரிங் செய்திருக்கின்றனர்.
படம் தொடங்கியதில் இருந்து நிவின் பாலியும், அவருடைய நண்பனும் குடிக்கின்றனர்... குடிக்கின்றனர்... குடித்துக் கொண்டே இருக்கின்றனர்... ஒருகட்டத்துக்குப் பிறகு இது போரடிக்க ஆரம்பிக்கிறது. இத்தனைக்கும் குடிக்காவிட்டால் கை, கால் நடுங்கும் அளவுக்கெல்லாம் நிவின் பாலி பாதிக்கப்படவில்லை. அப்படி இருந்தும், நண்பன் குடிக்கச் சொன்னான் என்பதற்காக, காதலியிடம் செய்த சத்தியத்தை மறந்துவிட்டு நிவின் பாலி குடிப்பது ஏன்? ஒருமுறை இப்படி நிகழ்ந்தால் பரவாயில்லை. திரும்பத் திரும்ப இப்படி நிவின் பாலி குடித்துக்கொண்டே இருக்கும்போது, நயன் மீது அவர் கொண்ட காதல் உண்மைதானா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
காதலர்கள் கொண்டாடும் அளவுக்கோ, காதலைக் கொண்டாடும் அளவுக்கோ நிவின் - நயன் காதலும் படத்தில் காட்டப்படவில்லை. நயனுக்காக நிவின் செய்யும் சின்னச் சின்ன விஷயங்கள் ரசிக்கும்படி இருக்கின்றன, அவ்வளவுதான். அதேபோல், க்ளைமாக்ஸ் சண்டையைத் தவிர ஆக்ஷன் என்பதும் படத்தில் பெரிதாக இல்லை. லவ்வும் ஆக்ஷனும் பெரிதாக இல்லாத இந்தப் படத்தை ட்ராமா என்றுதான் சொல்ல வேண்டும்.
ஜோமோன் ட் ஜான் மற்றும் ராபி வர்கீஸ் ராஜ் இருவரின் ஒளிப்பதிவு நேர்த்தியாக இருக்கிறது. கேரளாவின் அழகும், சென்னையின் பார்ட்டி கொண்டாட்டங்களும் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மது அருந்தும் காட்சிகள் அதிகமாக இருப்பதால், அதற்கேற்ற விளக்குகளும், துள்ளல் இசையும் பொருத்தமாக அமைந்துள்ளன. நிவின் பாலி குடிக்கும் காட்சிகளுக்கு விவேக் ஹர்ஷன் இன்னும் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.
எல்லோருக்கும் தெரிந்த வழக்கமான கதையை, வழக்கமாகவே கொடுத்த விதத்தில் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குநர் த்யான் ஸ்ரீனிவாசன்.