

தலைக்கூத்தல் என்ற முதியவர்களைக் கொல்லும் வழக்கம் பற்றி 'ஜலசமாதி' என்ற மலையாளப் படம் உருவாகிறது.
எழுத்தாளர் சேதுவின் 'அடையாளங்கள்' என்ற நாவலின் அடிப்படையில் உருவாகியிருக்கும் 'ஜலசமாதி', தலைக்கூத்தல் என்ற வழக்கத்தைப் பற்றியது. வீட்டுக்குச் சுமையாக இருக்கும் வயதான முதியவரக்ளைக் கொல்லும் இந்தப் பழக்கமும் இன்னமும் தமிழகத்தின் சில பகுதிகளில் வழக்கத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சமீபத்தில் சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருது பெற்ற 'பாரம்' திரைப்படமும் இதைப் பற்றியதே.
தன் தந்தையின் வேலை தனக்குக் கிடைக்க, அவர் இறக்க வேண்டும் என்று நினைக்கும் மகன். குடும்பத்தின் அன்பு கிடைக்காமல், ஒதுக்கப்பட்டுவிட்டதாக நினைக்கும் ஒரு தந்தை தனது விதியை ஏற்றுக்கொள்கிறார். இதுதான் வேணு நாயரின் 'ஜலசமாதி' படத்தின் சாரம்சம்.
இந்தப் படம் பற்றி இயக்குநர் வேணு பேசுகையில், "எதையும் அப்புறப்படுத்திவிடலாம் என்ற எண்ணம் இப்போது இருக்கிறது. ஒரு பொருள், அதன் தேவை முடிந்தவுடன் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் மனித உறவுகளுக்குள்ளும் வந்துவிட்டது. ஒருவரால் பிரயோஜனமில்லை என்று பார்க்கப்படும்போது அவரும் அப்புறப்படுத்தப்படுகிறார். வீட்டில் மூத்தவர்களை மதிப்பது இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதி. ஆனால் அது வேகமாக மாறி வருகிறது.
பல காரணங்களுக்காக வீட்டில் மூத்தவர்கள் தனியாக விடப்படுகிறார்கள் என்று படிக்கிறோம். குறிப்பாக குடும்பத்தில் பணப் பிரச்சினை வரும்போது. ஏன் குழந்தைகள் கூட வீதியில் விடப்படுகிறார்கள். குழந்தைகளை அவர்களின் அம்மாக்களே கொலை செய்கிறார்கள். இந்த தூக்கிப்போடும் கலாச்சாரம், அதிகரித்து வரும் நுகர்வோர் கலாச்சாரத்தின் தாக்கத்தால் உண்டானதே.
இதைப் பற்றி சேதுவிடம் பேசும்போதுதான் அவர் 'அடையாளங்கள்' நாவலை ஒட்டி ஒரு திரைக்கதை எழுதியிருப்பதாகக் கூறினார். அவர் எழுதியதைப் பார்க்கும்போது நான் எழுதியதை விட மிகச்சிறப்பாக இருந்தது என்பதை உணர்ந்தேன்.
குமிலி பகுதியில் தமிழ் பேசும் மக்கள் இருக்கும் சிறிய பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. அங்கு வெறும் 100 வீடுகள், ஒரு குட்டை, ஒரு கோயில்தான் இருக்கும். சுற்றிலும் காடு இருக்கும் பகுதி. தனிமையான ஒரு பகுதி அது. எங்கள் படத்துக்குத் தேவையான சூழல் அதில் இருந்தது.
ஒரு சில மலையாள நடிகர்களை நாங்கள் யோசித்தாலும், அந்தக் கதாபாத்திரத்தின் வயது, உடல்வாகு, மலையாளம் பேசும்போது வரும் தமிழ் வாடை என இது எம்.எஸ்.பாஸ்கருக்காகவே எழுதப்பட்ட கதாபாத்திரம் என்று எனக்குத் தோன்றியது" என்றார் இயக்குநர் வேணு.