அயராத உழைப்புக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி: தேசிய விருது குறித்து அன்பறிவ்
‘கேஜிஎஃப்’ படத்துக்காகக் கிடைத்த தேசிய விருது குறித்து, ‘அயராத உழைப்புக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி இது’ என சண்டைப் பயிற்சி இயக்குநர்கள் அன்பறிவ் தெரிவித்துள்ளனர்.
66-வது திரைப்பட தேசிய விருதுகள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டன. 419 திரைப்படங்கள் போட்டியிட்ட நிலையில், மொத்தம் 31 பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், சிறந்த சண்டைக்காட்சி அமைப்புக்கான விருது ‘கேஜிஎஃப்’ கன்னடப் படத்துக்கு வழங்கப்பட்டது.
இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்தவர்கள் இரட்டையர்களான அன்பறிவ். கார்த்தி நடிப்பில் வெளியான ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் சண்டைப் பயிற்சி இயக்குநர்களாக அறிமுகமான இவர்களது 100-வது படம், கார்த்தி நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ‘கைதி’ என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தேசிய விருது குறித்து தங்களுடைய மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ள அன்பறிவ், “அயராத உழைப்புக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி இது. பல வருடங்களாக திரைப்படங்களுக்கான அதிரடிக்காட்சி அமைப்பில் ஈடுபட்டு வரும் எங்களுக்கு, ‘கைதி’ 100-வது திரைப்படம்.
100-வது படம் விரைவில் வெளியாகப் போகிறது என்ற மகிழ்ச்சியில் இருந்த எங்களுக்கு, இந்த தேசிய விருது கூடுதல் மகிழ்வையும் உத்வேகத்தையும் அளித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.
தற்போது படப்பிடிப்பில் இருக்கும் ‘கேஜிஎஃப்’ படத்தின் இரண்டாம் பாகத்துக்கும் இவர்கள்தான் சண்டைப் பயிற்சி இயக்குநர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.
