

இரண்டு தேசிய விருதுகளுக்குத் தேர்வான நிலையில், 'கே.ஜி.எஃப்' திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது.
66-வது திரைப்பட தேசிய விருதுகள் வெள்ளிக்கிழமை மாலை அறிவிக்கப்பட்டன. மொத்தம் 419 திரைப்படங்கள் இம்முறை போட்டியிட்டன. 31 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த சண்டைக் காட்சியமைப்பு, சிறந்த கிராஃபிக்ஸ் என இரண்டு தேசிய விருதுகளை 'கே.ஜி.எஃப்' முதல் பாகம் வென்றுள்ளது.
இது குறித்து ட்விட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஹொம்பாலே ஃபிலிம்ஸ், "சிறந்த சண்டைக் காட்சியமைப்பு, சிறந்த கிராபிக்ஸ் என 'கேஜிஎஃப்' முதல் பாகத்தில் எங்கள் கடின உழைப்பை அங்கீகரித்து தேசிய விருதுகளால் ஆசிர்வதித்த நடுவர் குழுவுக்கு நன்றி. அன்பும் ஆதரவும் தந்த ரசிகர்களுக்கும் நன்றி சொல்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் 21-ம் தேதி கன்னடம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான 'கே.ஜி.எஃப்', மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. முக்கியமாக படத்தின் சண்டைக் காட்சிகள் அனைத்து விமர்சனங்களிலும் பாராட்டப்பட்டன. இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.