

'டியர் காம்ரேட்' இந்தி ரீமேக்கில் நடிக்கவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திக்கு விஜய் தேவரகொண்டா விளக்கம் அளித்துள்ளார்.
பரத் கம்மா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'டியர் காம்ரேட்'. தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ஜூலை 26-ம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆனால், பலரும் படத்தின் நீளம் அதிகம் என குறிப்பிட்டதைத் தொடர்ந்து ஜூலை 29 முதல் 13 நிமிடங்கள் குறைக்கப்பட்டது. ஒட்டு மொத்த வசூலில் படத்துக்கு பெரிய லாபமுமில்லை, நஷ்டமுமில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் 'டியர் காம்ரேட்' படம் வெளியாகும் முன்பே, படத்தைப் பார்த்துவிட்டு இந்தி ரீமேக் உரிமையைக் கைப்பற்றினார் முன்னணி இயக்குநர் கரண் ஜோஹர். இதில் விஜய் தேவரகொண்டாவே நடிப்பார் என்று தகவல் வெளியானது.
இந்தச் செய்தி தொடர்பாக விஜய் தேவரகொண்டா கூறுகையில், “தெலுங்கில் இன்னும் இரண்டு படங்கள் உள்ளன. 'டியர் காம்ரேட்’ படத்தில் காட்டிய உணர்ச்சிகளை மீண்டும் ரீமேக்கில் செய்ய விரும்பவில்லை. ஆனால் தெலுங்கு - இந்தி என ஒரே நேரத்தில் இரண்டு மொழியில் உருவாகும் படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளேன்.
இன்னும் சில நாட்களில் சரியான படத்தை உறுதி செய்வேன். இது எனக்கான எல்லையை விரிவுபடுத்தும். ஷாரூக் கான் இந்திப் படங்களின் வெளிநாட்டு வெளியீடு மூலம் அதற்கான சந்தையைப் பெரிதாக்கினார். தற்போது இந்தியாவுக்குள் இருக்கும் வெவ்வேறு மொழிகளுக்கு நடுவே இருக்கும் எல்லைகளை நாம் சுருக்க வேண்டும். இல்லையென்றால் எல்லா அரங்கிலும் 'அவெஞ்சர்ஸ்' பார்க்க நேரிடும். ஹாலிவுட்டுடன் போட்டி போட முடியாது. ஆனால் நமது நாட்டுக்குள் இணைந்து உழைத்து பல்வேறு மொழிகளில் கதை சொல்லலாம்.
நான் தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடிப்பேன். ஆனால், ராணாவைப் போல மொழிகள் கடந்து ரசிகர்களைச் சென்றடையும் கதைகளில் நடிப்பது எனக்குப் பிடிக்கிறது. ராணா தான் கரண் ஜோஹருக்கு 'பாகுபலி'யை அறிமுகம் செய்தார். அவர், ராஜமௌலி, தயாரிப்பாளர் ஷோபு ஆகியோரால்தான் தெலுங்கு சினிமாவுக்கு மீண்டும் மதிப்பு வந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார் விஜய் தேவரகொண்டா.