

'டியர் காம்ரேட்' படத்தில் தன் நடிப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, தனது ட்விட்டர் பதிவில் ராஷ்மிகா நன்றி தெரிவித்துள்ளார்.
பரத் கம்மா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'டியர் காம்ரேட்'. தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ஜூலை 26-ம் தேதி வெளியானது.
விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால், பலரும் படத்தின் நீளம் அதிகம் என குறிப்பிட்டதைத் தொடர்ந்து, இன்று (ஜூலை 29) முதல் 13 நிமிடங்கள் குறைக்கப்பட்டு, புதிதாக கேன்டீன் பாடல் இணைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் ராஷ்மிகாவின் நடிப்புக்கு பலரும் தங்களுடைய வாழ்த்தைத் தெரிவித்து வந்தனர். தொடர்ச்சியாக வாழ்த்துகள் குவிந்ததைத் தொடர்ந்து தனது ட்விட்டர் பதிவில் ராஷ்மிகா, “உங்கள் விமர்சனங்கள் மற்றும் ட்வீட்டுகளை படித்து வருகிறேன்.
'டியர் காம்ரேட்' குழுவை ஆதரித்து எங்கள் கடின உழைப்பைப் பாராட்டும் உங்கள் அனைவருக்கும் நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். நன்றி கூறுகிறேன். மனம் திறந்து பாராட்டுவது என்னை உணர்ச்சி மிகுதியாக்குகிறது. உங்கள் அனைவருடனும் எனக்கு நெருங்கிய நட்பு இருப்பது போல உணர்கிறேன்.
உங்கள் அனைத்து ட்வீட்டுகளுக்கும் பதில் இதுதான். - நான் உங்களுக்காக இருக்கிறேன். சிக்கலில் இருக்கும் அனைவருக்கும் நான் ஆதரவாக இருக்கிறேன். என்னை உங்கள் காம்ரேடாக இருக்க அனுமதியுங்கள்" என்று தெரிவித்துள்ளார் ராஷ்மிகா
தமிழில் நேரடியாக கார்த்தியுடன் 'சுல்தான்' படத்தின் மூலம் அறிமுகமாகிறார் ராஷ்மிகா. இந்தப் படத்தை இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கி வருகிறார்