

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வந்த 'ஹீரோ' கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
'டியர் காம்ரேட்' படத்தைத் தொடர்ந்து ஆனந்த் அண்ணாமலை இயக்கத்தில் நடிக்கத் தொடங்கிய படம் 'ஹீரோ'. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகும் என அறிவித்தது படக்குழு.
இதன் முதற்கட்ட படப்பிடிப்பு டெல்லியில் தொடங்கியது. இதில் பைக் ரேஸராக நடிக்க விஜய் தேவரகொண்டாவும் பிரத்யேக பயிற்சி எடுத்து நடிக்கத் தொடங்கினார். இந்நிலையில் திடீரென்று இந்தப் படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெரும் முதலீடு செய்யப்பட்டு, முதற்கட்ட படப்பிடிப்புக்கே பல கோடிகளை கொட்டியுள்ளது. ஆனால், படமாக்கப்பட்ட காட்சிகள் திருப்திகரமாக அமையாததால் கைவிடப்பட்டதாகவும் கூறுகிறார்கள்.
இது குறித்து விசாரித்த போது, "உண்மை தான். ஆனால் படம் கைவிடப்படவில்லை. விஜய் தேவரகொண்டா படத்தின் இயக்குநரிடம் சில மாற்றங்களை செய்யச் சொல்லியுள்ளார். விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்" என தெரிவித்தார்கள்.
நேற்று (ஜூலை 26) வெளியான 'டியர் காம்ரேட்' படத்துக்கு விமர்சன ரீதியாக வரவேற்பு கிடைத்துள்ளது. வசூல் ரீதியாக எப்படி என்று வரும் நாட்களில் தெரியவரும். இந்த வேளையில் 'ஹீரோ' படம் குறித்த இந்தத் தகவல் விஜய் தேவரகொண்டாவுக்கு சிறு பின்னடைவாகவே கருதப்படுகிறது.