ஹெல்மெட் அணியாமல் பைக்கில் ட்ரிபிள்ஸ்: துணிச்சலாக ட்வீட் செய்த ராம் கோபால் வர்மாவுக்கு அபராதம்

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் ட்ரிபிள்ஸ்: துணிச்சலாக ட்வீட் செய்த ராம் கோபால் வர்மாவுக்கு அபராதம்
Updated on
1 min read

ஹெல்மெட் அணியாமல் பைக்கில் ட்ரிபிள்ஸ் சென்று அதை துணிச்சலாக வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து வெளியிட்ட இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கு அபராதம் விதித்துள்ளது காவல்துறை.

ராம், நிதி அகர்வால், நபா நடேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'இஸ்மார்ட் ஷங்கர்'. பூரி ஜெகந்நாத் இயக்கி, தயாரித்துள்ளார். ஜுலை 18-ம் தேதி வெளியான இந்தப் படம் நல்ல வசூலைப் பெற்று வருகிறது. நீண்ட நாள் கழித்து பூரி ஜெகந்நாத்துகு ஹிட் படமாக இது அமைந்துள்ளது.

ராம் கோபால் வர்மாவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து, தன் திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார் பூரி ஜெகந்நாத். இதனால் பூரி ஜெகந்நாத்தின் படம் ஒவ்வொன்றும் வெளியாகும் போது, அது குறித்த அறிவிப்புகளை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்து தெரிவிப்பார் ராம் கோபால் வர்மா.

'இஸ்மார்ட் ஷங்கர்' திரைப்படம் நல்ல வசூல் செய்து வருவதைக் கொண்டாட ராம் கோபால் வர்மா ஹைதராபாத் வந்தார். அவருக்கு பூரி ஜெகந்நாத் விருந்தளித்தார். அப்போது பாரில் ஷாம்பைன் பாட்டிலைத் திறந்து படக்குழுவினர் அனைவர் மீதும் ஊற்றி, அந்த வீடியோவையும் தன் ட்விட்டரில் பகிர்ந்தார்.

பிறகு, நேற்று (ஜுலை 20) காலை 'ஆர்.எக்ஸ். 100' இயக்குநர் அஜய் பூபதி, 'லட்சுமி என்.டி.ஆர்' அகஸ்தியா ஆகியோருடன் புல்லட் பைக்கில் ட்ரிபிள்ஸில் பயணித்தார் இயக்குநர் ராம் கோபால் வர்மா. அதை புகைப்படமாக எடுத்து நாங்கள் மூவரும் ஹெல்மெட் அணியாமல், ட்ரிபிள்ஸில் மாஸ் கெட்டப்பில் 'இஸ்மார்ட் ஷங்கர்' படம் பார்க்க பயணிக்கிறோம் என்று பதிவிட்டார். பிறகு காவல்துறையினர் எங்கே.... அவர்கள் திரையரங்கிற்குள் 'இஸ்மார்ட் ஷங்கர்' பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் போல என்றும் தன் ட்விட்டர் பதிவில் கூறினார் ராம் கோபால் வர்மா.



இந்தப் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் "டிராஃபிக் விதிமீறலை எங்களுக்கு தெரியப்படுத்தியமைக்கு நன்றி. இதே போல் நீங்களும், உங்கள் வாழ்க்கையில் டிராஃபிக் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். நாங்கள் ஏன் திரையரங்குகளில் படம் பார்க்க வேண்டும். நிமிடத்துக்கு ஒரு முறை சாலைகளில் நடக்கும் டிராமாக்களை போக்குவரத்து காவல்துறை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்" என்று பதிலளித்துள்ளது காவல்துறை. மேலும், ராம் கோபால் வர்மா வெளியிட்ட புகைப்படங்கள், வீடியோக்களை ஆதாரமாக வைத்து, ஹெல்மெட் அணியாதது மற்றும் ட்ரிபிள்ஸ் சென்றது ஆகியவற்றுக்கு ரூ.1335 அபராதம் விதித்துள்ளது.

காவல்துறையின் இந்த அபராதம் மற்றும் ட்விட்டர் பதிவுக்கு ராம் கோபால் வர்மா, “காவல்துறையை நான் ரொம்ப காதலிக்கிறேன். 39 நாட்கள் உங்களுக்கு தொடர்ச்சியாக முத்தம் கொடுக்க ஆசை. உங்களது சிறப்பான பணிக்கு நன்றி. எனக்கு மட்டும் இரண்டாவது மகள் இருந்தால் நீங்கள் தான் என் மருமகன்” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in