

'டெம்பர்' படத்துக்குப் பிறகு என் படங்கள் எதுவுமே ஹிட் இல்லை என்று இயக்குநர் பூரி ஜெகந்நாத் தெரிவித்துள்ளார்.
ராம், நிதி அகர்வால், நபா நடேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ளா படம் 'இஸ்மார்ட் ஷங்கர்'. பூரி ஜெகந்நாத் இயக்கி, தயாரித்துள்ளார். இன்று (ஜுலை 18) இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்கள் பெற்று வந்தாலும், பல்வேறு திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாகி வருகிறது. வார இறுதியில் இந்தப் படம் வெற்றியா, தோல்வியா என்பது தெரிய வரும்.
இந்நிலையில் 'இஸ்மார்ட் ஷங்கர்' படத்தை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில், 'டெம்பர்' படத்துக்குப் பிறகு தன் படங்கள் எதுவுமே வெற்றியில்லை என்று இயக்குநர் பூரி ஜெகந்நாத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, “உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் 'டெம்பர்' படத்துக்குப் பிறகு என் படங்கள் ஹிட் ஆகவில்லை. அது என்னைப் பெரிதாகப் பாதித்தது.
எப்படியாவது ஒரு ஹிட் படம் தர வேண்டும் என்றிருக்கும்போதுதான் ராமைப் பார்த்தேன். ஒரு ஒழுக்கமில்லாத கதாபாத்திரத்தை வைத்து தனக்காக கதை எழுதச் சொன்னார். அப்படித்தான் ’இஸ்மார்ட் ஷங்கர்’ உருவானது. சிப் வைத்து மாறுவது என்பது ஹாலிவுட் படங்களின் பாதிப்பில் உருவானது” என்று தெரிவித்துள்ளார்.
'டெம்பர்' படம் தான் தமிழில் 'அயோக்யா', இந்தியில் 'சிம்பா' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. ஆனால், தமிழில் திட்டமிட்டபடி வெளியாகாததால் போதிய வரவேற்பு பெறவில்லை.