

புதிய மலையாளப் படங்களை அதிகாரப்பூர்வமாக பதிவிறக்கம் செய்து பார்க்கும் வகையில் புதிய இணையதளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சாதாரண பிரதி ரூ.180 என்றும், உயர் தர பிரதி (high defnition print) ரூ.300 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
>ரீல்மான்க்.காம் (>Reelmonk.com) என்ற இந்த தளத்தை, கொச்சியை சேர்ந்த ப்ளைஸ் க்ரோலி, விவேக் பால், கவுதம் வியாஸ் மூவரும் இணைந்து துவங்கியுள்ளனர். மூவரும் 22 வயது இளைஞர்கள்.
இது பற்றி பேசிய க்ரோலி, "நாங்கள் ஜூலை 20-ஆம் தேதி 15 திரைப்படங்களோடு எங்களது தளத்தை துவங்குகிறோம். இந்த எண்ணம் ஒரு நாள் இரவு நாங்கள் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது உதயமானது.
இந்த பயணத்தில் எங்களுக்கு ஏகப்பட்ட சவால்களும், பின்னடைவுகளும் இருந்தன. எல்லா தருணங்களையும் நாங்கள் சந்தோஷமாக நினைவுகூர்கிறோம். திருட்டு சிடிக்கள், முறையற்ற ஆன்லைன் பிரதிகள் போன்றவை எல்லாம் குறிப்பிட்ட படம் சரியாகக் கிடைப்பதில்லை என்பதாலேயே நடக்கிறது. அது எளிதாக, நியாயமான விலைக்குக் கிடைக்கும்போது கண்டிப்பாக அந்த முயற்சி வெற்றி பெறும் என்றே நம்புகிறோம்" என்றார்
மேலும் இது குறித்து பேசிய பால், "எங்கள் தளத்தில் இருக்கும் செயலி மூலம் எவ்வளவு பேர் பதிவிறக்கம் செய்துள்ளார்கள் என்பதை தினமும் தயாரிப்பாளர் தெரிந்து கொள்ளலாம். ஒரு முறை கணினியில் பதிவிறக்கம் செய்யப்படும் படத்தை எவ்வளவு முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். ஆனால் அதை பென் ட்ரைவ் போன்ற மற்ற சாதனங்களில் பிரதி எடுக்க முடியாது. ஒரு படத்தை 1 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்தால் தயாரிப்பாளருக்கு சரியான வருமானம் கிடைக்கும்" என்றார்.
தனது 'நீ - நா' படத்தை ரீல்மான்க் தளம் மூலமாக வெளியிடும் தயாரிப்பாளர் லால் ஜோஸ் தனது ஐரோப்பிய பயணத்தின்போது பல மலையாளிகளை சந்தித்தாகவும், புதிய மலையாளப் படங்களை பார்க்க முடியாமல் போவது குறித்து அவர்கள் தெரிவித்தார்கள் என்றும் கூறினார்.
மேலும், "வேறு வழியின்றி கள்ளத்தனமான பிரதிகளை பார்க்க நேரிடுவதாக அவர்கள் கூறினர். வாய்ப்பிருந்தால் அதிகாரப்பூர்வமாக பார்க்க அவர்கள் தயாராக உள்ளனர்" என்றார்.