

ராஜமெளலி இயக்கத்தில் தயாராகி வரும் 'பாஹுபலி' திரைப்படம், மே 15-ம் தேதி வெளியாகும் என்று படத்தின் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி அறிவித்துள்ளார்.
பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்து வரும் 'பாஹுபலி' படத்தை இயக்கியுள்ளார் ராஜமெளலி. கீரவாணி இசையமைத்துள்ள இப்படத்தை அர்கா மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது.
தெலுங்கு திரையுலகில் தயாரான படங்களுள் அதிக பொருட்செலவில் தயாராகி வரும் படம் 'பாஹுபலி' என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் வெளியீடு குறித்து பல்வேறு தகவல்கள் கடந்த சில மாதங்களாக வெளியாகி வந்தன. தற்போது இது குறித்து, ட்விட்டரில், இயக்குநர் ராஜமௌலி அறிவித்துள்ளார்.
"இன்று பாஹுபலி குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளோம். ஏனென்றால் ஒரு பாடலைத் தவிர படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. எனவே பாஹூபலி முதல் பாகத்தை மே 15 அன்று வெளியிட வேலைகள் நடந்து வருகின்றன"
இவ்வாறு ராஜமௌலி கூறியுள்ளார்.
'பாஹுபலி' திரைப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட இருக்கிறார்கள். தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் தயாராகி வருகிறது. தமிழுக்கு 'மகாபலி' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.