

தனது காதலர் ஷிலாதித்யாவை பாடகி ஷ்ரேயா கோஷல் மும்பையில் வியாழக்கிழமை மணந்தார்.
தேச அளவில் பல மொழிகளில் தொடர்ந்து திரைப் பாடல்களைப் பாடிவரும் பிரபல பாடகி ஷ்ரேயா கோஷல், தனது பால்ய நண்பரான ஷிலாதித்யாவை மணந்தார். ஷிலாதித்யா தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி வருகிறார். பாரம்பரிய வங்க முறைப்படி இந்தத் திருமணம் நடைபெற்றது.
இது குறித்து, ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள ஷ்ரேயா கோஷல், "நான் எனது காதலர் ஷிலாதித்யாவை எனது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் சூழ மணந்து கொண்டேன். சுவாரசியமான வாழ்க்கை காத்திருக்கிறது" என ட்விட்டரில் பதிவேற்றியுள்ளார்.
30 வயதான ஷ்ரேயா கோஷல் 2002-ஆம் ஆண்டு தேவதாஸ் என்ற படத்தின் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். இதுவரை நான்கு தேசிய விருதுகள் உட்பட எண்ணற்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.