

வெங்கடேஷ் நடிக்கவிருக்கும் நேரடி தெலுங்கு படம் ஒன்றை இயக்கவிருக்கிறார் 'சலீம்' இயக்குநர் நிர்மல் குமார்.
நிர்மல் குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் 'சலீம்'. விஜய் ஆண்டனி, சரவணன் மற்றும் ஆர்.கே.சுரேஷ் ஆகியோரது தயாரிப்பில் உருவான இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. 'நான்' பட பாணியில் விறுவிறுப்பான திரைக்கதை என்பதால் விமர்சகர்களும் இப்படத்தை பாராட்டினார்கள்.
'சலீம்' படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தெலுங்கு ரீமேக் உரிமைக்கு கடும் போட்டி நிலவியது. தெலுங்கில் முன்னணி நடிகரான வெங்கடேஷ் இப்படத்தின் ரீமேக் உரிமையில் நடிக்க விருப்பபட்டார். ஆனால், ரீமேக் உரிமைப் பேச்சுவார்த்தையின் போதே விஜய் ஆண்டனி தெலுங்கில் இப்படத்தை டப் செய்து வெளியிட தீர்மானித்தார். 'சலீம்' படத்தின் தெலுங்கு இசை வெளியீடு முடிந்து விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் நடிகர் வெங்கடேஷ் தற்போது 'சலீம்' இயக்குநர் நிர்மல் குமார் இணைந்து பணியாற்ற திட்டமிட்டு இருக்கிறார்கள். பூபதி ராஜா என்ற முன்னணி திரைக்கதையாளர் மற்றும் நிர்மல் குமார் இணைந்து வெங்கடேஷுக்காக ஒரு கதையை தயார் செய்து கொண்டிருக்கிறார்கள். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.
இந்த நேரடி தெலுங்கு படத்தை முடித்துவிட்டு, பாரதிராஜா நடிக்கும் 'ஓம்' படத்தை இயக்கத் திட்டமிட்டு இருக்கிறார் நிர்மல் குமார்.