சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா கர்நாடகத்தில் வரும் 14-ல் தொடங்குகிறது

சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா கர்நாடகத்தில் வரும் 14-ல் தொடங்குகிறது
Updated on
1 min read

கர்நாடக மாநிலத்தில் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா வரும் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடக்கிறது. இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசுப் பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பார்வையாளர்களாக பங்கேற்கிறார்கள்.

சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவை, கர்நாடக சலனசித்ரா அகாடமியுடன் இணைந்து அம்மாநில அரசு நடத்துகிறது.

இது குறித்து கர்நாடக சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவின் ஒருங்கிணைப்பாளரும், இயக்குநருமான வசந்த் முகேஷி புனேகர் பெங்களூரில் செவ் வாய்க்கிழமை கூறியதாவ‌து:

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கர்நாடகத்தில் உள்ள 30 மாவட்டங்களிலும் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா நவம்பர் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை ஒரு வாரம் நடைபெறுகிறது.ஒவ்வொரு நாளும் காலை 8.30 மணிமுதல் 10.30 மணி வரையில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழந்தைகள் திரைப்படங்கள் ஒளிபரப்பப்படும். இதில் 10 நாடுகளை சேர்ந்த சர்வதேச அளவில் புகழ் பெற்ற 15 திரைப்படங்கள் திரை யிடப்படுகின்றன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் 20 முதல் 30 வரையிலான திரையரங்குகளில் சேட்டிலைட் மூலம் திரைப்படங்கள் ஒளிப்பரப் பப்படுகிறது. இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பார்வையாளர்களாக பங்கேற்கிறார்கள். இவர்கள் திறமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த திரைப்பட விழாவில் குழந்தைகளின் வயதின் அடிப்படையில் இரு வகை யான திரைப்படங்கள் திரையிடப் படுகின்றன.

6-வயது முதல் 10 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 10 படங்களும், 11-வயது முதல் 16 வயது வரையிலான மாண வர்களுக்கு 10 படங்களும் இலவசமாக திரைப்படங்கள் காண்பிக்கப்படவுள்ளன.

முதல் முயற்சி

நாட்டில் முதல்முறையாக கர்நாடகத்தில் சர்வதேச குழந் தைகள் திரைப்பட விழா கிராமப்புற மாணவர்களுக்கா கவும், அரசுப்பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்காவும் நடத்தப் படுகிற‌து. இந்த முயற்சி வெற்றி பெற்றால் வருகிற ஆண்டுகளிலும் தொடர்ச்சியாக நடத்தப்படும். இந்த விழாவில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த தைனா, சீனாவை சேர்ந்த சிண்ட்ரெல்லா மூன், செக் குடியரசை சேர்ந்த ப்ளூ டைகர் உள்ளிட்ட வெளிநாட்டு திரைப்படங்களும், இந்தியாவை சேர்ந்த அலேகலு, கோப், கஃபால் ஆகிய படங்களும் திரையிடப்படவுள்ளன.

விழாவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வருகிற 13-ம் தேதி பெங்களூருவில் உள்ள‌ அம்பேத்கர் பவனில் தொடங்கி வைக்கிறார். நடிகர் அர்ஜூன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in