

கர்ப்பமாக இருப்பதாக வரும் புரளியில் தவறில்லை என்று சமந்தா பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா, லட்சுமி, நாக செளரியா, ராஜேந்திர பிரசாத் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'ஓ பேபி'. நேற்று (ஜுலை 5) வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
வசூல் ரீதியாக எப்படி என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.இந்த வரவேற்பால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது. மேலும் இந்தப் படத்தின் கதை முழுக்க தன்னைச் சுற்றியே கதை நகர்வதால், பல்வேறு வழிகளில் படத்தை விளம்பரப்படுத்தி வந்தார் சமந்தா.
சில மாதங்களுக்கு முன்பு, சமந்தா கர்ப்பமாக இருக்கிறார். அவர் இனி படங்களில் நடிக்க மாட்டார் என்று செய்திகள் வெளியானது. பல்வேறு பெரிய படங்களில் ஒப்பந்தமாகியிருப்பதால், இந்தச் செய்தி பெரும் வைரலானது.
இந்தக் கர்ப்பச் செய்தி தொடர்பாக 'ஓ பேபி' படத்துக்காக அளித்துள்ள பேட்டியில் முதல் முறையாக பதிலளித்துள்ளார் சமந்தா. அதில், “கர்ப்பமாக இருப்பதாக வரும் புரளிகளில் எந்தத் தவறும் கிடையாது. ஏனென்றால் நான் கூட என் நண்பர்களிடம் எப்போது குழந்தைப் பெற்றுக்கொள்ளப் போகிறார்கள் என்று கேட்டுகொண்டே இருப்பேன். நேரம் வரும்போது நான் கண்டிப்பாக குழந்தை பெற்றுக்கொள்வேன். ரகசியமாக வைத்துக் கொள்ள மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார் சமந்தா